திருநம்பியுடன் காதல்வயப்பட்ட இளம்பெண்
திருநம்பியுடன் காதல்வயப்பட்ட இளம்பெண்
மேட்டுப்பாளையம்
கோவை அருகே திருநம்பியுடன் காதல் வயப்பட்ட இளம் பெண்ணை பெற்றோர் கண்டித்ததால் தற்கொலைக்கு முயன்றார்.
இளம்பெண்
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் 18 வயது இளம்பெண். பிளஸ்-2 படித்து முடித்து உள்ளார். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த 27 வயது திருநம்பியுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. இதனால் இருவரும் அடிக்கடி நேரில் சந்தித்தும், செல்போனில் பேசியும் பழகி வந்தனர்.
இந்த காதல் விவகாரம் இளம்பெண்ணின் பெற்றோருக்கு தெரிய வந்தது. அவர்கள் தங்களது மகளை கண்டித்தனர். ஆனால் அந்த இளம் பெண்ணால் திருநம்பியை மறக்க முடியவில்லை. இதனால் மனவேதனை அடைந்த இளம்பெண் கடந்த 15-ந் தேதி தற்கொலைக்கு முயன்றார்.
போலீசில் புகார்
இதனை பார்த்து அவரது பெற்றோர் அவரை மீட்டு அந்த பகுதியில் உள்ள ஆஸ்பத்திக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றார். அங்கு சிகிச்சை பெற்ற இளம் பெண் குணமடைந்து வீட்டிற்கு திரும்பினார்.அதன் பின்னரும் அவர் திருநம்பியுடன் தொடந்து பழகி வந்தார். அவரது பெற்றோர் எவ்வளவோ எடுத்து கூறியும் அவர் பழகுவதை நிறுத்தவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து இளம்பெண்ணின் பெற்றோர் இது குறித்து மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் போலீசார் அந்த இளம்பெண்ணை அழைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இளம்பெண், திருநம்பியுடன் தான் செல்வேன், பெற்றோருடன் செல்ல மாட்டேன் என கூறி விட்டார். இதனை தொடர்ந்து போலீசார் இளம் பெண்ணை அந்த பகுதியில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.