கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற இளம்பெண்


கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற இளம்பெண்
x
தினத்தந்தி 11 Oct 2022 12:15 AM IST (Updated: 11 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு இளம்பெண் தீக்குளிக்க முயன்றார். அவர், தனது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து தொல்லை கொடுக்கும் முன்னாள் கணவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.

கோயம்புத்தூர்

கோவை

கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு இளம்பெண் தீக்குளிக்க முயன்றார். அவர், தனது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து தொல்லை கொடுக்கும் முன்னாள் கணவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.

மண்எண்ணெய் பாட்டில்

கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. அங்கு ஏராளமானோர் மனு அளிக்க வந்தனர். இதையொட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அவர்கள், மனு அளிக்க வந்த பொதுமக்களின் உடமைகளை பரிசோதித்த பின்னரே உள்ளே அனுமதித்தனர்.

இதற்கிடையில் 26 வயது இளம்பெண் ஒருவர், தனது தாய் மற்றும் மகனுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தார். அப்போது ஒரு குடிநீர் பாட்டிலில் தண்ணீருக்கு பதிலாக மண்எண்ணெயை கொண்டு வந்திருந்தார். மேலும் அந்த மண்எண்ணெயை தனது உடலில் ஊற்றி கொள்ள முயன்றார். இதை கண்ட போலீசார் உடனடியாக அந்த மண் எண்ணெய் பாட்டிலை பிடுங்கினர். இதனால் அவர் தீக்குளிப்பது தடுக்கப்பட்டது.

விவாகரத்து

பின்னர் அந்த இளம்பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அந்த இளம் பெண் கூறியதாவது:-

எனக்கும், கோவில்பாளையத்தை சேர்ந்த ஒருவருக்கும் கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அப்போது எனது கணவருக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனால் எங்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து ஜமாத்தார்கள் பேச்சுவார்த்தை நடத்தி எங்களை சேர்த்து வைத்தனர். பின்னர் நான் கர்ப்பம் அடைந்தேன். அப்போது கணவர் என் மீது சந்தேகப்பட்டு தகராறு செய்தார். பின்னர் நாங்கள் விவாகரத்து பெற்றுக்கொண்டோம். எங்களுக்கு 5 வயதில் மகன் உள்ளார். விவாகரத்திற்கு பிறகு நான் எனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறேன்.

ஆபாச புகைப்படம்

இந்த நிலையில் அவர், எனது புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து வேறு நபர்களுக்கு செல்போன் மூலம் அனுப்பி தொல்லை கொடுத்து வருகிறார். எனக்கு, பெற்றோர் வேறு நபருடன் திருமணம் செய்து வைத்தனர். ஆனால் முன்னாள் கணவர், எனது சித்தரிக்கப்பட்ட ஆபாச புகைப்படங்களை 2-வது கணவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் அனுப்பி தொல்லை கொடுத்தார். இதனால் 2-வது கணவரும் என்னை விட்டு பிரிந்து சென்று விட்டார்.

தற்போது நான் வாழ வழியின்றியும், வேலைக்கு செல்ல முடியாமலும் மிகவும் அவதி அடைந்து வருகின்றேன். எனவே எனது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து தொடர்ந்து தொல்லை கொடுத்து வரும் முன்னாள் கணவர் குறித்து போலீசில் புகார் அளித்தாலும் நடவடிக்கை எடுக்கப்படுவது இல்லை. எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து போலீசார் அந்த இளம்பெண்ணை சமாதானம் செய்து, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளிக்கும்படி கூறி அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.


Next Story