வேடசந்தூர் அருகே போலீஸ் நிலையம் முன்பு வாலிபர் தீக்குளிக்க முயற்சி
வேடசந்தூர் அருகே கொலை மிரட்டல் விடுத்தவரை கைது செய்யக்கோரி, போலீஸ் நிலையம் முன்பு வாலிபர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
வேடசந்தூர் அருகே கொலை மிரட்டல் விடுத்தவரை கைது செய்யக்கோரி, போலீஸ் நிலையம் முன்பு வாலிபர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
முன்விரோதத்தில் தகராறு
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள முத்துபழனியூரை சேர்ந்தவர் முனியப்பன் (வயது 34). இவருக்கும், அதே ஊரை சேர்ந்த உறவினரான பால் வியாபாரி செந்தில்முருகன் (35) என்பவருக்கும் இடையே நிலப்பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.
இந்தநிலையில் கடந்த மாதம் 21-ந்தேதி இவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில், முனியப்பனின் மனைவி தேவியை செந்தில்முருகன் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கூம்பூர் போலீஸ் நிலையத்தில் முனியப்பன் புகார் அளித்தார். அதன் பேரில் செந்தில்முருகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.
கொலை மிரட்டல்
இந்தநிலையில் தலைமறைவாக இருந்த செந்தில்முருகன் நேற்று மாலை முனியப்பனின் வீட்டிற்கு வந்தார். அப்போது தன் மீது போலீசில் புகார் கொடுத்தது கேட்டு செந்தில்முருகன் தகராறு செய்தார்.
இதுமட்டுமின்றி முனியப்பன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அவர் கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து சென்று விட்டார்.
இதற்கிடையே தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் செந்தில்முருகனால் ஆபத்து உள்ளதாக கூறி, பாதுகாப்பு கேட்டு முனியப்பன், தனது மனைவி, குழந்தைகளுடன் கூம்பூர் போலீஸ் நிலையத்திற்கு சென்றார். கொலை மிரட்டல் விடுத்த செந்தில்முருகனை கைது செய்ய வலியுறுத்தினார். அப்போது பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.
தீக்குளிக்க முயற்சி
இதனையடுத்து போலீஸ் நிலையத்தில் இருந்து வெளியே சென்ற முனியப்பன், தனது மொபட்டில் வைத்திருந்த பெட்ரோல் கேனை எடுத்தார். பின்னர் போலீஸ் நிலையம் முன்பு நின்றபடி, பெட்ரோலை தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
இதனை பார்த்த போலீசார் விரைந்து சென்று அவரை தடுத்து நிறுத்தினர். பின்னர் முனியப்பனை மீட்டு, சிகிச்சைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் வேடசந்தூரில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.