மர இலைக்குள் வைத்து மதுபானம் கடத்திய வாலிபர் கைது


மர இலைக்குள் வைத்து மதுபானம் கடத்திய வாலிபர் கைது
x

மர இலைக்குள் வைத்து மதுபானம் கடத்திய வாலிபர் கைது

நாகப்பட்டினம்

நாகூரில் மர இலைக்குள் வைத்து மதுபானம் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த 600 மதுபாட்டில்கள், மோட்டார்சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

வாகன சோதனை

நாகூர் அருகே வெட்டாறு பாலத்தில் நேற்று மதியம் தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காரைக்காலில் இருந்து நாகப்பட்டினம் நோக்கி ஒரு மோட்டார் சைக்கிள் வந்தது. அந்த மோட்டார் சைக்கிளின் பின்புறத்தில் கால்நடைகளுக்கு கொடுக்கும் மர இலைகள் அதிக அளவில் இருந்தது.

இதையடுத்து போலீசார் அந்த மோட்டார் சைக்கிளை நிறுத்த முயன்றனர். ஆனால் மோட்டார் சைக்கிளில் வந்தவர் நிறுத்தாமல் வேகமாக சென்றார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் சிறிது தூரம் விரட்டி சென்று மோட்டார் சைக்கிளை பிடித்து சோதனை செய்தனர்.

விசாரணை

அதில் மர இலைகளுக்கு நடுவில் 2 சாக்கு பைகளில் 600 மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து அந்த நபரை நாகூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

கைது

விசாரணையில் அவர் நாகப்பட்டினம் செல்லூர் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த ராஜேஷ்குமார் (வயது 33) என்பதும், அவர் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதியில் இருந்து மதுபானம், சாராயம் ஆகியவற்றை நூதன முறையில் நாகப்பட்டினத்துக்கு கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து ராஜேஷ்குமாரை போலீசார் கைது செய்து மதுபானங்களை பறிமுதல் செய்தனர்.

நூதன முறையில் மதுபானம் கடத்திய நபரை பிடித்த போலீசாரை, போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ்சிங் பாராட்டினார்.


Related Tags :
Next Story