காட்டெருமை தாக்கி வாலிபர் படுகாயம்


காட்டெருமை தாக்கி வாலிபர் படுகாயம்
x
தினத்தந்தி 6 Nov 2022 12:15 AM IST (Updated: 6 Nov 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

வால்பாறை அருகே காட்டெருமை தாக்கியதில் வாலிபர் படுகாயம் அடைந்தார்.

கோயம்புத்தூர்

வால்பாறை,

வால்பாறை அருகே காட்டெருமை தாக்கியதில் வாலிபர் படுகாயம் அடைந்தார்.

காட்டெருமை தாக்கியது

வால்பாறை அருகே கவர்க்கல் மலைவாழ் கிராமத்தை சேர்ந்தவர் சிவப்பிரகாஷ் (வயது 22). இவர் நேற்று மதியம் குடியிருப்புக்கு அருகே உள்ள ஆற்று பகுதிக்கு சென்று உள்ளார். அப்போது வனப்பகுதிக்குள் இருந்து ஓடி வந்த காட்டெருமை சிவப்பிரகாசை முட்டி தூக்கி வீசியது. இதில் கீழே விழுந்த சிவப்பிரகாஷ் எழுந்து, அங்கிருந்து தப்பி ஓட முயற்சித்துள்ளார். ஆனால், காட்டெருமை மீண்டும் வந்து சிவப்பிரகாசை தாக்கியது.

இதனால் அச்சத்தில் வாலிபர் காட்டெருமையிடம் இருந்து தப்பி செல்ல முயற்சித்த போது, காட்டெருமை துரத்தி சென்று 3-வது முறையாக தாக்கியது. இதில் சிவப்பிரகாஷ் படுகாயம் அடைந்தார். அவரது சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து மீட்டு சிகிச்சைகாக வால்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது, சிவப்பிரகாசுக்கு தலை, கால் ஆகிய இடங்களில் படுகாயம் ஏற்பட்டு, காதில் இருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது.

மேல் சிகிச்சை

இதனால் எக்ஸ்ரே ஸ்கேன் போன்ற பரிசோதனைகள் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த வால்பாறை வனச்சரக வனத்துறையினர் படுகாயம் அடைந்த வாலிபரை சந்தித்து, ஆறுதல் கூறி சிகிச்சைக்கு வேண்டிய உதவிகளை செய்தனர். காட்டெருமை துரத்தி, துரத்தி தாக்கிய சம்பவத்தால் மலைவாழ் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறும்போது,

வால்பாறை பகுதியில் அடிக்கடி வனவிலங்குகள் தாக்குதல், வாகன விபத்து ஏற்பட்டு வால்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக வருகின்றனர். ஆனால், எக்ஸ்ரே எடுப்பதற்கு கூட வசதியில்லாத நிலையில், பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதனால் நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர். வால்பாறை அரசு ஆஸ்பத்திரியில் எக்ஸ்ரே ஸ்கேன் கருவிகள் இருந்தும், அதனை கையாள தொழில்நுட்ப பணியாளர்கள் இல்லை. எனவே, கோவை மாவட்ட கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, தொழில்நுட்ப பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்றனர்.


Next Story