குண்டர் சட்டத்தில் ஜெயிலில் இருந்து வெளியே வந்த வாலிபர் குத்திக்கொலை


குண்டர் சட்டத்தில் ஜெயிலில் இருந்து வெளியே வந்த வாலிபர் குத்திக்கொலை
x

குடியாத்தத்தில் கஞ்சா வழக்கில் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டு ஜெயிலில் இருந்து வெளியே வந்தவர் குத்திக்கொலை செய்யப்பட்டார். மற்றொருவர் கஞ்சா விற்றதை காட்டி கொடுத்ததாக ஒரு கும்பல் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளனர்.

வேலூர்

கஞ்சா விற்பனை

குடியாத்தத்தை அடுத்த கள்ளூர் மருத்துவர் காலனி பகுதியில் வசித்து வரும் தாவூத் மகன் அஸ்லாம் என்ற இம்ரான் (வயது 29). இவருக்கும் சித்தூர் கேட் மூனாப்டிப்போ பகுதியை சேர்ந்த ரேஷ்மா (21) என்பவருக்கும் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தற்போது ரேஷ்மா 3 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

இம்ரானுக்கு கண் பார்வை குறைவு. இவர் பல வருடங்களாக ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்திவந்து விற்பனை செய்து வந்துள்ளார். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு கஞ்சா விற்ற வழக்கில் இவரை போலீசார் பிடித்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு அழைத்து சென்றபோது பிளேடால் அறுத்துக் கொண்டு போலீசாரை மிரட்டி அங்கிருந்து தப்பி வந்து விட்டார்.

குண்டர் சட்டத்தில் கைது

தொடர்ந்து கஞ்சா விற்று வந்ததால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இம்ரான் கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து அவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சில மாதங்களுக்கு முன்புதான் சிறையில் இருந்து வெளியே வந்தார்.

குடியாத்தம் அடுத்த ஆர்.கொல்லப்பல்லி கிராமத்தை சேர்ந்தவர் விநாயகம். இவரது மகன் குடியரசு (23). இவர் கஞ்சா விற்றதாக குடியாத்தம் தாலுகா போலீசாரால் பலமுறை கைது செய்யப்பட்டார். கஞ்சா விற்பனையில் இவருக்கும், இம்ரானுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

போலீஸ் கண்காணிப்பு

சிறையில் இருந்து வெளியே வந்த இம்ரான் சில மாதங்களாக கஞ்சா விற்பனை செய்வது இல்லை என கூறப்படுகிறது. அதே போல் கஞ்சா வழக்கில் பலமுறை குடியரசை கைது செய்ததற்கு இம்ரான் அளித்த தகவல்தான் காரணம் என சிலர் குடியரசுவிடம் கூறியுள்ளனர். இதனால் இம்ரான் மீது, குடியரசு ஆத்திரத்தில் இருந்துள்ளார்.

இந்தநிலையில் சில நாட்களுக்கு முன்பு குற்றத்தடுப்பு நடவடிக்கைக்காக குடியாத்தம் போலீசார் குடியரசு நடவடிக்கைகளை கண்காணித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த குடியரசு தன்னை கஞ்சா விற்பதாக இம்ரான் அடிக்கடி போலீசாருக்கு தகவல் தெரிவிப்பதாக எண்ணி நேற்று முன்தினம் இரவு குடியரசு தன்னுடன் சிலரை அழைத்துக்கொண்டு இம்ரான் வீட்டுக்கு சென்றுள்ளார்.

குத்திக்கொலை

அங்கு உன்னுடன் பேசவேண்டும் என கூறி வீட்டில் இருந்த இம்ரானை கஸ்பா சுடுகாடு அருகே அழைத்து சென்றுள்ளார். அங்கு வைத்து ஏன் என்னைப் பற்றி போலீசில் போட்டுக் கொடுத்தாய் என கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுத்துள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் குடியரசு மற்றும் உடன் வந்தவர்கள் இம்ரானை தாக்கி உள்ளனர். மேலும் கத்தியால் வயிற்றில் சரமாரியாக குத்தியுள்ளனர். இதில் இம்ரான் குடல் சரிந்து ரத்த வெள்ளத்தில் அலறிதுடித்துள்ளார்.

அலறல் சத்தம் கேட்ட உறவினர்களும், அக்கம் பக்கத்தினரும் விரைந்து வந்து இம்ரானை மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இம்ரான் சிகிச்சை பலனின்றி இரவு 12 மணி அளவில் பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி, சப்- இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் உள்ளிட்டோர் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். இந்தநிலையில் குடியரசுவை போலீசார் கைதுசெய்தனர்.

மேலும் குடியாத்தம் அடுத்த சேங்குன்றம் கிராமத்தை சேர்ந்த சதாசிவம் மகன் பூவரசன் (26), நாகராஜ் மகன் வேல்குமார் (23) ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். பூவரசன் மீது குடியாத்தம் தாலுகா போலீஸ் நிலையத்தில் பல வழக்குகள் உள்ளன. இவர் குண்டர் சட்டத்தில் ஏற்கனவே கைது செய்யப்பட்டவர். அதேபோல் வேல்குமார் மீதும் குடியாத்தம் தாலுகா போலீஸ் நிலையத்தில் வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது.

கஞ்சா விற்பனை சம்பந்தமாக ஏற்பட்ட தகராறில் நடந்த இந்த கொலை சம்பவம் குடியாத்தம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story