நெல்லையில் குதிரையை வெட்டிக்கொன்ற வாலிபரால் பரபரப்பு


நெல்லையில் குதிரையை வெட்டிக்கொன்ற வாலிபரால் பரபரப்பு
x

நெல்லையில் குதிரையை வெட்டிக்கொன்ற வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.

திருநெல்வேலி

நெல்லை தச்சநல்லூரை அடுத்த தேனீர்குளத்தைச் சேர்ந்தவர் தனுஷ்கோடி. இவர் சொந்தமாக குதிரைகளை வளர்த்து வருகிறார். இவர் பல்வேறு இடங்களில் நடைபெறும் 'ரேக்ளா ரேஸ்' பந்தயத்தில் தனது குதிரைகளை பங்கேற்கச் செய்வது வழக்கம். இந்த பந்தயங்களில் தனுஷ்கோடியின் குதிரைகள் பரிசுகளை வென்றுள்ளன.

இந்த நிலையில் தனுஷ்கோடிக்கு சொந்தமான ஆண் குதிரை கடந்த சில நாட்களாக சரிவர நடக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தது. எனவே, அந்த குதிரையின் கால் பாதங்களில் லாடம் கட்டுவதற்காக, அதனை நெல்லை டவுன் பழனி தெருவில் உள்ள உறவினரின் வீட்டு தொழுவத்தில் கட்டி வைத்திருந்தார்.

நேற்று முன்தினம் இரவில் அந்த தொழுவத்துக்குள் புகுந்த மர்மநபர் அரிவாளால் குதிரையை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டார். இதில் பலத்த காயமடைந்த குதிரை ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து உயிருக்கு போராடியவாறு கிடந்தது.

நேற்று காலையில் இதனைப் பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே குதிரையை மீட்டு, ராமையன்பட்டியில் உள்ள கால்நடை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு குதிரைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி சிறிதுநேரத்தில் குதிரை இறந்தது.

குதிரையை வெட்டிக் கொன்ற சம்பவம் நெல்லை மாநகர பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் படுகாயத்துடன் குதிரை உயிருக்கு போராடிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து குதிரையை வெட்டிக்கொன்ற நபர் மீது நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதுகுறித்து நெல்லை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

விசாரணையில், நெல்லை பகுதியைச் சேர்ந்த இசக்கிமுத்து (வயது23) என்பவர் முன்விரோதம் காரணமாக தொழுவத்தில் கட்டப்பட்டு இருந்த குதிரையை வெட்டிக் கொன்றது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.


Next Story