மாற்றுத்திறனாளி குழந்தையுடன் தர்ணாவில் ஈடுபட்ட வாலிபர்
கோவை கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி குழந்தையுடன் வாலிபர் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை
கோவை கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி குழந்தையுடன் வாலிபர் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
குழந்தையுடன் தர்ணா
கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து வந்த பொதுமக்கள் பலரும் கோரிக்கை மனு அளித்தனர்.
கோவை வெள்ளலூரை சேர்ந்த சேகர் (வயது30) என்ற வாலிபர் தனது மாற்றுத்திறனாளி குழந்தை உள்பட 3 குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அவர் திடீரென்று தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
உடனே அங்கிருந்த போலீசார் விரைந்து சென்று சேகரின் பிரச்சினை குறித்து கேட்டனர். பின்னர் அவரிடம் மனு கொடுக்குமாறு அறிவுறுத்தினர்.
அவர், கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனு வில், "எங்களது குடும்பத்தின் சொத்தை ஒரு நபரிடம் விற்றேன். இதில் என் தாய்க்கு தரவேண்டிய பணத்தை அவர் கொடுக்க வில்லை.
அது குறித்து நான் கேட்டதால் ஆத்திரம் அடைந்த அந்த நபர், எங்களை அடித்து உதைத்தார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது. இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பூட்டி கிடக்கும் பொதுக்கழிவறை
கோவை மாவட்ட பா.ம.க. சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், தொண்டாமுத்தூர் ஒன்றியம் ஆலாந்துறை பேரூராட்சி முகாசிமங்கலத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ -மாணவிகள் அதிகம் உள்ளனர். இங்குள்ள பொதுக்கழிப்பிடம் 5 ஆண்டுகளாக பூட்டிக் கிடக் கிறது.
எனவே யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ள வனப் பகுதிகளை முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் மிகுந்த அச்சத்து டன் பயன்படுத்தும் நிலை உள்ளது.
இதனால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் பொதுக் கழிப்பிட வசதிக்கு ஏற்பாடு செய்து தர வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.
வருவாய் இழப்பு
கோவை புலியகுளத்தை சேர்ந்த ரவி மற்றும் பொதுமக்கள் அளித்த மனுவில் புலியகுளம் பகுதியில் இந்து அறநிலையத்துறை கோவிலில், நிர்வாக பொறுப்பில் உள்ள ஒருவர் அரசுக்கு வர வேண்டிய கோவில் வருமானத்துக்கு இழப்பை ஏற்படுத்தி வருகிறார்.
அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.
கோவை மாவட்ட வாடகைக்கு குடியிருப்போர் சங்கத்தினர் அளித்த மனுவில், கள்ளிமடை, சிங்காநல்லூர் பகுதியில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட, கூலி தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இலவச பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இதேபோல் பல்வேறு பிரச்சினைகள் குறித்து பொதுமக்கள் மனுக்களை அளித்தனர்.