பெங்களூருவில் நடந்த நகை கொள்ளை வழக்கில், கைதான வாலிபர் தப்பி ஓட்டம்


பெங்களூருவில் நடந்த நகை கொள்ளை வழக்கில், கைதான வாலிபர் தப்பி ஓட்டம்
x

பெங்களூருவில் நடந்த நகை கொள்ளை வழக்கில், திருப்போரூரில் கைதான வாலிபர் போலீசாரிடம் இருந்து தப்பினார்.

செங்கல்பட்டு

திருப்போரூர்,

பெங்களூருவில் கடந்த மாதம் துப்பாக்கி முனையில் ஒரு நகை கொள்ளை நடந்தது. இதுகுறித்து பெங்களூரு புலிக்கேசிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை சம்பவம் தொடர்பாக விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த வில்லியம் (வயது 23) என்பவரை கைது செய்தனர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் கொள்ளையடித்த நகை மற்றும் கை துப்பாக்கியை செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் தங்கி வேலை செய்து வரும் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த விக்னேஷ் (20) என்பவரிடம் கொடுத்து வைத்ததாக தெரிவித்தார்.

இதையடுத்து நேற்று முன்தினம் இரவு பெங்களூரு போலீசார் கைது செய்யப்பட்ட வில்லியமுடன் திருப்போரூர் வந்து அந்த பகுதியில் உள்ள பேக்கரியில் வேலை செய்துகொண்டிருந்த விக்னேஷை பிடித்தனர்.

பின்னர் விக்னேஷை அழைத்துக்கொண்டு அவர் தங்கி இருந்த வாடகை வீட்டுக்கு சென்று அங்கிருந்த 10 பவுன் நகை, கை துப்பாக்கி ஆகியவற்றை மீட்டனர். தொடர்ந்து பெங்களூரு போலீசார் அதே தெருவில் உள்ள திருப்போரூர் போலீஸ் நிலையத்திற்கு வந்தனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட வில்லியம், விக்னேஷ் ஆகியோரின் கையில் விலங்கு மாட்டி 2 போலீசார் கண்காணிப்பில் ஜீப்பில் உட்கார வைத்து விட்டு மற்ற போலீசார் திருப்போரூர் போலீஸ் நிலையத்திற்குள் சென்று கொள்ளை சம்பவம் குறித்தும், வாலிபரை கைது செய்த விவரத்தை கூறிக்கொண்டு இருந்தனர்.

இதற்குள் காரில் உட்கார்ந்து இருந்த விக்னேஷ் பாதுகாப்புக்கு இருந்த போலீசாரிடமிருந்து தப்பிவிட்டார். போலீஸ் நிலைய வாசலிலேயே வாலிபர் தப்பியது போலீசாரை அதிர்ச்சியடைய வைத்தது.

பின்னர் தப்பி ஓடிய வாலிபரை உள்ளூர் போலீசார் உதவியுடன் பெங்களூரு போலீசார் பல இடங்களில் தேடினர். பின்னர் கிடைக்காததால் மீட்கப்பட்ட நகை மற்றும் துப்பாக்கியுடன் போலீசார் பெங்களூரு புறப்பட்டு சென்றனர்.

மேலும் தப்பி ஓடியவரை திருப்போரூர் போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.


Next Story