விவசாயிகள் வங்கி கணக்கு எண்ணுடன் ஆதாரை இணைக்க வேண்டும்


விவசாயிகள் வங்கி கணக்கு எண்ணுடன் ஆதாரை இணைக்க வேண்டும்
x

நாமக்கல் மாவட்டத்தில் பிரதம மந்திரி கிஷான் கவுரவ நிதி திட்டத்தின் கீழ் 13-வது தவணை தொகை பெற இதுவரை ஆதார் எண்ணை இணைக்காத 7,953 விவசாயிகள் வங்கி கணக்கு எண்ணுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என கலெக்டர் ஸ்ரேயாசிங் அறிவுறுத்தி உள்ளார்.

நாமக்கல்

7,953 விவசாயிகள் இணைக்கவில்லை

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பிரதம மந்திரி கிஷான் கவுரவ நிதி திட்டத்தின் கீழ் நிலமுள்ள விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டிற்கு ரூ.6 ஆயிரம் வேளாண் இடுபொருட்கள் வாங்குதல் மற்றும் வேளாண்மை தொடர்பாக செலவினங்கள் மேற்கொள்ள ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டத்தில் தற்பொழுது 7,953 விவசாயிகள் தனது பயன்பாட்டிலுள்ள வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் விவரங்களை இணைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் ஆதார் விவரங்களை வங்கி கணக்குடன் இணைக்காத பயனாளிகளுக்கு இந்த திட்டத்தின் 13-வது தவணை தொகை விடுவிக்கப்பட இயலாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

புதிய வங்கி கணக்கு

எனவே ஆதார் விவரங்களை வங்கி கணக்கு எண்ணுடன் இணைக்காத விவசாயிகள் 13-வது தவணை தொகையை தொடர்ந்து பெறுவதற்கு உடனடியாக வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் விவரங்களை இணைத்திட வேண்டும். இல்லையெனில் அருகிலுள்ள அஞ்சல் அலுவலகங்களில் பூஜ்ஜியம் தொகையில் புதிய வங்கி கணக்கு தொடங்கிட வேண்டும்.

மேலும் அஞ்சல் அலுவலகங்களில் வங்கி கணக்கு தொடங்கும்போது 48 மணி நேரத்திற்குள் ஆதார் விவரங்கள் சரி செய்யப்படும். எனவே இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி இதுவரை ஆதார் எண்ணை இணைக்காத விவசாயிகள் அஞ்சல் அலுவலகங்களில் பூஜ்ஜியம் தொகையில் வங்கி கணக்கு தொடங்கி பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

1 More update

Next Story