ஆதார் சேவை-தபால் சேமிப்பு கணக்கு சிறப்பு முகாம்
ஆதார் சேவை-தபால் சேமிப்பு கணக்கு சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
கரூர் கோட்ட அஞ்சல் துறை கண்காணிப்பாளர் ராஜ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-கரூர் அஞ்சல் கோட்டத்திற்கு உட்பட்ட மின்னவேலி (கோவில்பட்டி-மணப்பாறை), கோடந்தூர் (தென்னிலை மேற்கு), வளையல்காரன்புதூர் (ரெங்கநாதபுரம்), கூடலூர் (கூடலூர் மேற்கு), வேளாண்செட்டியூர் (தெத்துப்பட்டி), முனையனூர் (சித்தலவாய்), வேலாம்பூண்டி, நெய்தலூர் தெற்கு (நெய்தலூர்), பொறத்தாகுடி (பழையகோட்டை), சுக்காலியூர் (கருப்பம்பாளையம்) ஆகிய கிராமங்களில் கிராம பஞ்சாயத்து தலைவரின் உதவியுடன் அஞ்சல் துறையின் சிறப்பு முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முகாம் நாளை (புதன்கிழமை) முதல் வருகிற 20-ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்த முகாமில் தபால் சேமிப்பு கணக்குகள் தொடங்குதல், மகளிருக்காக மத்திய அரசு புதிதாக அறிமுகப்படுத்தி உள்ள மகளிர் மேன்மை திட்டம் (அதிக வட்டி விகிதம் கொண்ட 2 வருட சேமிப்பு பத்திரம்), ஆதார் சேவைகள் (புதிதாக ஆதார் பதிவு செய்தல், ஆதார் அட்டையில் திருத்தம் செய்தல், செல்போன் எண் இணைத்தல்), தபால் ஆயுள் காப்பீடு, இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்குகள் மற்றும் தபால் துறையின் மூலம் வழங்கக்கூடிய இதர சேவைகள் குறித்தும் விழிப்புணர்வு வழங்கப்படுகிறது. இந்த கிராமங்களில் சிறப்பு முகாம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்ச்சியாக நடைபெற உள்ளது. எனவே பொதுமக்கள் இந்த சிறப்பு முகாமினை பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.