ஆதார் சேவை சிறப்பு முகாம்
ஆதார் சேவை சிறப்பு முகாம் இன்று தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது
கடலூர் கோட்ட தபால் அலுவலகங்களின் கண்காணிப்பாளர் கணேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கடலூர் தபால் கோட்டத்திற்குட்பட்ட பண்ருட்டி அருகே அங்குசெட்டிப்பாளையம், குறிஞ்சிப்பாடி சின்னக் கண்ணாடி, கடலூர் வெள்ளப்பாக்கம், சிதம்பரம் வில்லியநல்லூர் ஆகிய கிராமங்களில் கிராம பஞ்சாயத்து உதவியுடன் ஆதார் சேவை சிறப்பு முகாம் இன்று (வெள்ளிக்கிழமை) மற்றும் நாளை (சனிக்கிழமை) ஆகிய 2 நாட்கள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஊராட்சி மன்ற அலுவலகங்களில் தபால் துறை சார்பில் நடக்கிறது.
முகாமில் தபால் சேமிப்பு கணக்குகள் தொடங்குதல், மகளிருக்காக மத்திய அரசு புதிதாக அறிமுகப்படுத்தி உள்ள மகளிர் மதிப்பு திட்டம் (உயர்ந்த வட்டி விகிதம் கொண்ட 2 வருட சேமிப்பு பத்திரம்), ஆதார் சேவைகள் மற்றும் இதர தபால் சேவைகளும் வழங்கப்பட உள்ளது .
இதில் புதிதாக ஆதார் பதிவு செய்தல், ஆதார் அட்டையில் திருத்தம் செய்தல், செல்போன் எண் இணைத்தல் போன்ற சேவைகள் வழங்கப்பட உள்ளது. பொதுமக்கள் அனைவரும் தங்களின் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து இந்த சேவையை பெற்று பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.