தென்பசியார்நாகஅங்காளம்மன் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா108 விநாயகருக்கு சிறப்பு யாகத்துடன் தொடங்கியது
தென்பசியார் நாகஅங்காளம்மன் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா 108 விநாயகருக்கு சிறப்பு யாகத்துடன் தொடங்கியது.
திண்டிவனம்,
திண்டிவனம் அருகே தென்பசியார் கிராமத்தில் அமைந்துள்ள சுயம்பு நாகஅங்காளம்மன் கோவிலில் வருடந்தோறும் ஆடி அமாவாசை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி 10-ம் ஆண்டு திருவிழா நேற்று முன்தினம் கோவில் வளாகத்தில் உள்ள 108 விநாயகருக்கு சிறப்பு யாகத்துடன் தொடங்கியது. இதையொட்டி நாகஅங்காளம்மன் கோவில் முன்பு வைக்கப்பட்டிருந்த 108 கலசங்களுக்கு நம்மவீட்டு நாகராஜ் அய்யர் குழுவினர் சிறப்பு யாகம் நடத்தி தீபாராதனை செய்தனர். பின்னர் கலசங்களை பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து சென்று 108 விநாயகருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கியது.
தீமிதி திருவிழா
இதை தொடர்ந்து 15-ந்தேதி வரை அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனை நிகழ்ச்சிகளும் நடக்கிறது. மேலும் 16-ந்தேதி (புதன் கிழமை) காலை 10 மணிக்கு கன்னிமார் கோவிலுக்கு கிரக புறப்பாடு, பால்குடங்களுடன் கிரக வீதிஉலா, அம்மனுக்கு சாகை கூழ் வார்த்தல், ஊரணி பொங்கல், அலகு சாத்துதல் நடக்கிறது. மாலை 6 மணிக்கு தீமிதி திருவிழா நடைபெறுகிறது.
17-ந்தேதி அம்மனுக்கு திருக்கல்யாணமும், 18-ந்தேதி அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சக்தி உபாசகர் ராம்குமார், அருள்வாக்கு சித்தர் அசோக்ராஜ் அடிகளார், கோவில் நிர்வாகத்தினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.