சடையாண்டி கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா


சடையாண்டி கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா
x

செம்பட்டி அருகே, சடையாண்டி கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா நடந்தது.

திண்டுக்கல்

செம்பட்டி அருகே உள்ள அக்கரைப்பட்டி சடையாண்டி கோவிலில், ஆடி அமாவாசை திருவிழா நேற்று நடந்தது. அக்கரைப்பட்டி, ஆத்தூர், மல்லையாபுரம், செம்பட்டி, சித்தையன்கோட்டை, சின்னாளப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சேவல், கிடா வெட்டி, மொட்டையடித்து வழிபாடு செய்தனர். மேற்கு தொடர்ச்சி மலை உச்சியில் உள்ள குகைக்கு சென்று சடையாண்டி சாமியை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

மேலும் அலகு குத்தியும், பால் காவடி, பன்னீர் காவடி எடுத்தும் ஆடிப்பாடி, மேளதாளம் வாணவேடிக்கையுடன் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வழிபாடு நடத்தினர். இதன் காரணமாக மலையடிவாரத்தில் உள்ள சடையாண்டி கோவிலில் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

இதற்கிடையே அக்கரைப்பட்டியில் இருந்து சடையாண்டி கோவில் செல்லும் சாலை குண்டும், குழியுமாக இருப்பதால் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் காமராஜர் அணையில் குளிக்கக்கூடும் என்பதால் அணைப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story