குன்றத்தூர் முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை விழா


குன்றத்தூர் முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை விழா
x

குன்றத்தூர் முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை விழா நடந்தது.

காஞ்சிபுரம்

ஆடி கிருத்திகை விழா

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூரில் புகழ் பெற்ற முருகன் கோவில் அமைந்துள்ளது. ஆடி கிருத்திகை விழாவையொட்டி கோவிலுக்கு நேற்று காலை முதலே பக்தர்கள் அதிக அளவில் வர தொடங்கினார்கள். மேலும் வெயிலின் தாக்கம் அதிகரித்ததால் கோவிலுக்கு செல்லும் படிக்கட்டுகள் மற்றும் பல்வேறு இடங்களில் நிழலுக்காக பந்தல்கள் அமைக்கப்பட்டது. குன்றத்தூர் முருகன் கோவிலுக்கு சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் காலையிலிருந்து அதிக அளவில் வந்ததால் பக்தர்களின் வசதிக்காக இலவச தரிசனம் மற்றும் கட்டண தரிசனம் ஏற்பாடு செய்யப்பட்டது.

கோவில் சன்னதியில் உற்சவர் இருந்ததால் பக்தர்கள் கூட்ட நெரிசலுடன் சாமி தரிசனம் செய்தனர். அதனை குறைக்கும் வகையில் உற்சவரை கோவில் வளாகத்தில் இருந்த மண்டபத்திற்கு மாற்றப்பட்டதால் பக்தர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்தனர். வாகன நெரிசல் ஏற்படாத வகையில் வாகனங்கள் தனியாக நிறுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்ததால் பக்தர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்யவும் போக்குவரத்து நெரிசலும் தவிர்க்கப்பட்டது. கோவில் வளாகத்தில் 101 கிலோ சந்தனத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகன் காட்சி அளித்தது பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

கூடுதல் பஸ்கள்

கோவிலுக்கு வந்த பக்தர்கள் ஏராளமானோர் சந்தனத்துடன் அருள் பாலித்த முருகனை தங்களது செல்போனில் படம் பிடித்து சென்றனர். ஆடி கிருத்திகையையொட்டி கோவில் வளாகம் முழுவதும் மலர்களாலும், வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பக்தர்களுக்கு மோரும், அன்னதானமும் வழங்கப்பட்டது. சாமி தரிசனம் செய்துவிட்டு வந்த பக்தர்களுக்கு லட்டு இலவசமாக வழங்கப்பட்டது.

ஆடி கிருத்திகையை முன்னிட்டு கோவிலுக்கு கூடுதல் அரசு பஸ்கள் இயக்கப்பட்டது. காவடி எடுத்து வந்த பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பியபடி சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தாமரைக்கண்ணன், அறங்காவலர்கள் குணசேகர், சரவணன், கோவில் செயல் அலுவலர் ஸ்ரீகன்யா ஆகியோர் செய்து இருந்தனர்.

வண்டலூர்

ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு வண்டலூர், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், காட்டாங்கொளத்தூர், பொத்தேரி, ஊரப்பாக்கம், மண்ணிவாக்கம், கண்டிகை உள்பட பல்வேறு கிராமங்களில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள், அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.

வல்லக்கோட்டை

காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த வல்லக்கோட்டையில் புகழ் பெற்ற முருகன் கோவில் அமைந்துள்ளது. இங்கு வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். ஆடி கிருத்திகை விழா, நேற்று கோலாகமாக நடைபெற்றது.

விழாவையொட்டி மூலவருக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து சந்தனக்காப்பு, நடைபெற்று தங்க கிரீடத்துடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். உற்சவர் மலர் அலங்காரத்தில் ரத்தினாங்கி அணிவிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story