ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் ஆடி கிருத்திகை விழா
ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் ஆடி கிருத்திகை விழா நடைபெற்றது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த ரத்தினகிரி வள்ளி, தெய்வானை சமேத பாலமுருகன் கோவிலில் ஆடி பரணி, ஆடி கிருத்திகை விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ஆடி பரணிவிழா நடைபெற்றது. ஆடி கிருத்திகையையொட்டி அதிகாலை கோவில் நடைதிறக்கப்பட்டு ராணிப்பேட்டை நகரத்தார் சங்கம் சார்பில் மூலவருக்கு பால் அபிஷேகம், விபூதி, சந்தனம், தயிர், குங்குமம், தேன், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்கள், பழங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம், தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு வைரவேல், சேவல் கொடியுடன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, கோவில் பரம்பரை அறங்காவலர் பாலமுருகனடிமை சுவாமிகள் தலைமையில் மஹா தீபாராதனை நடைபெற்றது.
பக்தர்கள் காவடி எடுத்துக்கொண்டும், வேல் குத்திக்கொண்டும் வந்து நேர்த்திக் கடன் செலுத்தினார்கள். தங்க ரதத்தில் உற்சவர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு சண்முக புஷ்கரணி தடாக்தில் தெப்பல் உற்சவம் நடைபெற்றது. கோவில் வளாகம் முழுவதும் மின்விளக்குகளால் அலங்கர்கப்பட்டு இருந்தது. வேலூர் ஆற்காடு, ராணிப்பேட்டை, வாலாஜா, சோளிங்கர் ஆகிய பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. அசம்பாவிதங்களை தவிர்க்க காவல்துறை சார்பில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. விழாவில் திராளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.