முருகன் கோவில்களில் ஆடி கிருத்திகை சிறப்பு வழிபாடு


முருகன் கோவில்களில் ஆடி கிருத்திகை சிறப்பு வழிபாடு
x

திருக்கோவிலூர், சங்கராபுரம், தியாதுருகம் பகுதி முருகன் கோவில்களில் ஆடி கிருத்திகையையொட்டி நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்

கோளப்பாறை முருகன் கோவில்

திருக்கோவிலூர் அருகே கோளப்பாறை கிராமத்தில் மலை மீது அமைந்துள்ள முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை சிறப்பு வழிபாடு வெகு விமரிசையாக நடைபெற்றது. இதை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடைபெற்றன. இதில் கோளப்பாறை, திருக்கோவிலூர் மற்றும் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் சில பக்தர்கள் தங்களின் வேண்டுதல் நிறைவேறும் வகையில் பாத யாத்திரையாக நடந்து வந்து சாமிக்கு பொங்கலிட்டும், மாவிளக்கு ஏற்றியும் படையலிட்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், உபயதாரர்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

குந்தவேல்முருகன்

அதேபோல் சங்கராபுரம் அருகே உள்ள தேவபாண்டலம் குந்தவேல் முருகர் கோவிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு குந்தவேல் முருகனுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து சாமி ஊர்வலம் நடைபெற்றது.

குளத்தூர் சரவணபுரம் ஆறுமுக பெருமான் கோவிலில் சிறப்பு வழிபாடும், யாகவேள்வியும், ராவத்தநல்லூர் சக்தி மலை முருகன் கோவில் மற்றும் சங்கராபுரம் பகுதியில் உள்ள பல்வேறு முருகன் கோவில்களில் ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தியாகதுருகம் பாலமுருகன்

தியாகதுருகம் பஸ் நிலையம் அருகே உள்ள நஞ்சுண்ட ஞானதேசிக ஈஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள பாலமுருகனுக்கு ஆடி கிருத்திகை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி நேற்று காலை பாலமுருகனுக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

அப்போது கோட்டகுளத்தில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட பால்குடங்களை பெண்கள் சாமிக்கு ஊற்றி அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து சாமிக்கு சந்தனக்காப்பு ராஜ அலங்காரம் செய்து, மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


Next Story