கங்கை கொண்ட சோழபுரத்தில் ஆடித் திருவாதிரை விழா


கங்கை கொண்ட சோழபுரத்தில் ஆடித் திருவாதிரை விழா
x

கங்கை கொண்ட சோழபுரத்தில் ஆடித் திருவாதிரை விழா நடந்தது.

அரியலூர்

மீன்சுருட்டி:

அரியலூர் மாவட்டம், கங்கை கொண்ட சோழபுரத்தை தலைமையிடமாக கொண்டு ஆட்சிபுரிந்த மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளை, அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். அந்த கோரிக்கையை ஏற்று தமிழக முதல்-அமைச்சர், மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடித் திருவாதிரை நாள், அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று அறிவித்திருந்தார். அந்த வகையில் மாமன்னர் ராஜேந்திர சோழன் கங்கை கொண்ட சோழபுரத்தில் கட்டிய பிரகதீஸ்வரர் கோவிலில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆடித் திருவாதிரை விழா சிறப்பாக நடைபெறவுள்ளது. இந்த விழா காலை 8 மணிக்கு மங்கள இசையுடன் தொடங்குகிறது.

இதைத்தொடர்ந்து காலை 10.30 மணியளவில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்து பேசுகிறார். இதில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொள்ள உள்ளனர். தொடர்ந்து பரத நாட்டியம், தப்பாட்டம், கரகாட்டம், காவடி ஆட்டம், கிராமிய நடனம், கட்டைக்கால் ஆட்டம், சிலம்பாட்டம், பள்ளி மாணவ-மாணவிகள் பங்குபெறும் கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் இரவு வரை நடைபெறவுள்ளது.

ஆடித்திருவாதிரை விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் வசதிக்காக குடிநீர் வசதி, மின்விளக்கு வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள், பாதுகாப்பு வசதிகள், அரியலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து செல்லும் வகையில் சிறப்பு பஸ் வசதி உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் இன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, வரலாற்று சிறப்புமிக்க கங்கைகொண்ட சோழபுரத்தில் இன்றைய தினம் நடைபெறவுள்ள ஆடித்திருவாதிரை விழாவில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


Next Story