அம்மன் கோவில்களில் ஆடி வெள்ளி சிறப்பு பூஜை


அம்மன் கோவில்களில் ஆடி வெள்ளி சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 29 July 2023 2:30 AM IST (Updated: 29 July 2023 2:31 AM IST)
t-max-icont-min-icon

அம்மன் கோவில்களில் ஆடி வெள்ளி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

நீலகிரி

கூடலூர்

அம்மன் கோவில்களில் ஆடி வெள்ளி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

ஆடி வெள்ளி

ஆடி மாதம் அம்மன் வழிபாட்டுக்கு உகந்ததாக கருதப்படுகிறது. இதையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நேற்று ஆடி மாத 2-வது வெள்ளிக்கிழமையையொட்டி நீலகிரி மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. கூடலூர் அருகே மேல் கூடலூர் சந்தக்கடை மாரியம்மன் கோவிலில் அதிகாலை 5.30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக பூஜை நடைபெற்றது. தொடர்ந்து ரூபாய் நோட்டுகளால் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதையடுத்து அம்மனுக்கு கூழ் படையலிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து மதியம் 12 மணிக்கு உச்சி கால தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

மசினகுடி அருகே பொக்காபுரம் மாரியம்மன் கோவிலிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஊட்டி, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்தனர். மேலும் கூடலூர் பட்டத்துளசியம்மன், வனதுர்க்கை, மங்குழி பகவதி அம்மன் உள்பட பல்வேறு அம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

ஊஞ்சல் வழிபாடு

கோத்தகிரி கடை வீதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை மற்றும் ஊஞ்சல் வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டு அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. கடைவீதி பண்ணாரி மாரியம்மன் கோவில், டானிங்டன் கருமாரியம்மன் கோவில் உள்ளிட்ட அம்மன் கோவில்களிலும் அம்மனுக்கு சிறப்பு அலங்கார, அபிஷேக பூஜைகள் நடைபெற்றன.

கூழ் காய்ச்சி...

ஊட்டி மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. நேற்று காலை முதல் மாலை வரை பக்தர்கள் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்தனர்.

பிங்கர் போஸ்ட் மசினி அம்மன் கோவில், முள்ளிக்கொரை சிக்கம்மன் கோவில், அக்ரஹாரம் பகுதியில் உள்ள துளிர் காத்த அம்மன் கோவில், காந்தல் மூவுலக அரசியம்மன் கோவில், கூடுதல் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பிரத்தியங்கரா தேவி கோவில், மஞ்சூர் அம்மன் கோவில் உள்பட பல்வேறு கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது. மேலும் பக்தர்கள் கூழ் காய்ச்சி வழங்கினர்.


Next Story