வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர தேரோட்டம்
பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர தேரோட்டம் நடந்தது. தேரை பெண்கள் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.
பண்ருட்டி,
ஆடிப்பூர திருவிழா
பண்ருட்டி திருவதிகையில் பிரசித்திபெற்ற வீரட்டானேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. பழமை வாய்ந்த இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடிப்பூர தேர்த்திருவிழா 10 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான ஆடிப்பூர திருவிழா கடந்த 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி தினமும் வீரட்டானேஸ்வரருக்கும், பெரியநாயகி அம்மனுக்கும் சிறப்பு பூஜைகள் நடந்து வந்தது.
தேரோட்டம்
விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. இதையொட்டி மூலவருக்கும், பெரியநாயகி அம்பாளுக்கும் விசேஷ அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து காலை 8.15 மணியளவில் உற்சவர் பெரியநாயகி அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார். இதையடுத்து அங்கு கூடியிருந்த பெண் பக்தர்கள் மட்டும் ஓம் சக்தி ஓம் சக்தி என பக்தி கோஷம் எழுப்பியபடி வடம் பிடித்து தேரை மாட வீதிகள் வழியாக இழுத்துச் சென்றனர். தேரானது காலை 9.30 மணியளவில் நிலையை வந்தடைந்தது.
பக்தர்கள் சாமி தரிசனம்
இந்த விழாவில் பண்ருட்டி நகரமன்ற தலைவர் ராஜேந்திரன், இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலர்கள் மகாதேவி, வேல்விழி, வியாபார சங்க பிரமுகர்கள் மோகன், வீரப்பன், ராஜேந்திரன், சபாபதி செட்டியார் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், பொதுமக்கள் செய்திருந்தனர்.