ஆடிப்பூர விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்


ஆடிப்பூர விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
x

திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவில் ஆடிப்பூர உற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 1-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது.

சிவகங்கை

திருப்பத்தூர்,

திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவில் ஆடிப்பூர உற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 1-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது.

ஆடிப்பூர உற்சவ விழா

திருப்பத்தூர் அருகே திருக்கோஷ்டியூர் உள்ளது. இங்கு சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்திற்குட்பட்ட பிரசித்தி பெற்ற சவுமிய நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடிப்பூர உற்சவ விழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தடை காரணமாக விழா நடக்கவில்லை.

இந்தாண்டிற்கான விழா தொடங்கியது. முன்னதாக சேனை முதல்வர் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து நேற்று காலை திருக்கல்யாண மண்டபத்தில் ஆண்டாளுடன் சிறப்பு அலங்காரத்தில் சவுமிய நாராயண பெருமாள் எழுந்தருளினார். கோவில் கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று தீபாராதனையுடன் காலை 11 மணிக்கு கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. இரவு ஆண்டாளுடன் பெருமாள் திருவீதி உலா புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. 2-ம் திருநாளில் இருந்து 6-ம் திருநாள் வரை ஆண்டாளுடன் பெருமாள் சிம்ம வாகனம், அனுமார் வாகனம், கருடசேவை, சேஷவாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

தேரோட்டம்

வருகிற 29-ந்தேதி அலங்கார திருமஞ்சனம் நிகழ்ச்சியும், இரவு ஆண்டாளுடன் பெருமாள் தங்க பல்லக்கில் வீதி உலா, சூர்ணாபிஷேகம் மற்றும் வீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது. 8-ம் திருநாள் அன்று குதிரை வாகனத்தில் புறப்பாடும், 9-ம் திருநாள் அன்று தலையரங்காரம் ஏற்றுதல் நிகழ்ச்சியும், அன்ன வாகனத்தில் புறப்பாடு நிகழ்ச்சியும் நடக்கிறது. 10-ம் திருநாளான வருகிற 1-ந்தேதி தேரோட்டம் நிகழ்ச்சி நடக்கிறது. முன்னதாக காலை 9.40 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி எழுந்தருளல், மாலை 5 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. மறுநாள் காலை தீர்த்தவாரி நிகழ்ச்சியும், இரவு தங்க தோளுக்கினியானில் சுவாமி ஆஸ்தானத்திற்கு எழுந்தருளி அருள்பாலிக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது.Next Story