கோவில்களில் ஆடிப்பூர விழா-அம்மனுக்கு வளையல்களில் சிறப்பு அலங்காரம்


மதுரை மாவட்டத்தில் உள்ள கோவில்களில் ஆடிப்பூர விழாவில் அம்மனுக்கு வளையல்களில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

மதுரை

சோழவந்தான்,

மதுரை மாவட்டத்தில் உள்ள கோவில்களில் ஆடிப்பூர விழாவில் அம்மனுக்கு வளையல்களில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

ஆடிப்பூர விழா

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன்கோவிலில் ஆடிப்பூர விழா நடந்தது. இவ்விழாவை முன்னிட்டு அம்மனுக்கு பால், தயிர், இளநீர் உள்பட 21 அபிஷேக பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. வளையல், ஜாக்கெட் துணி வைத்து சண்முகவேல் பூசாரி பூஜைகள் செய்தார். இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் அதிகமாக வருகை புரிந்து அம்மனை தரிசித்தனர். கோவில் சார்பாக வழங்கப்பட்ட வளையல், ஜாக்கெட் துணி மற்றும் பொங்கல் பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. இதேபோல் சோழவந்தான் உளுந்தூர் காளியம்மன் கோவில், திரவுபதி அம்மன்கோவில், தென்கரை அகிலாண்டஈஸ்வரி அம்மன் கோவில்களில் ஆடிபூரம் விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடந்து பக்தர்களுக்கு வளையல் வழங்கப்பட்டது.

சோழவந்தான் ஜெனகநாராயணபெருமாள் கோவிலில் ஆடிப்பூர விழாவை முன்னிட்டு ஆண்டாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து ஆண்டாள் அலங்காரமாகி வீதி உலா நடந்தது.

அலங்காநல்லூரில் உள்ள அய்யப்பன் கோவிலின் உள் பிரகாரத்தில் இருக்கும் ராஜராஜேஸ்வரி, தாயார், துர்கை அம்மன் உள்ளிட்ட பல்வேறு சன்னதிகளில் நேற்று ஆடிப்பூர விழா நடந்தது. இதை தொடர்ந்து அனைத்து பெண் தெய்வங்களுக்கும் வளையல்கள், பூமாலைகள் அணிவிக்கப்பட்டு, சர விளக்கு தீபாராதனைகள் நடந்தது. சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பெண்கள், பக்தர்கள் வந்து கலந்து கொண்டு விளக்கேற்றி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு வளையல், பூ, மஞ்சள் குங்குமம் பிரசாத பொட்டலங்கள் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி அருளாளர் சீனிவாசன் மற்றும் பக்தர்கள் சபையினர் செய்திருந்தனர்.

திருமங்கலம்

திருமங்கலம் அருகே கட்ராம்பட்டி கிராமத்தில் பழமை வாய்ந்த ரகுபதி கிருஷ்ணா கொண்டம்மாள் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆடி மாதம் ஆடிப்பூரத்தை முன்னிட்டு 30 ஆயிரம் வளையல்கள் கொண்டு அம்மாள் சிலையானது சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மதுரை, விருதுநகர், நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் இந்த வளையல் திருவிழாவில் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு வளையல்கள், அன்னதானம் வழங்கப்பட்டது.

மதுரையை அடுத்த அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் ஆடிப்பூர விழா நேற்று நடந்தது. இதில் மூலவர் ஸ்ரீஆண்டாளுக்கு அந்த சன்னதியில் சிறப்பு பூஜைகள் நடந்தது. அதன் பின்னர் உற்சவர் ஆண்டாள் வளையல்கள், பூமாலைகள், அலங்காரத்தில் காட்சி தந்தார். பின்னர் மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் ஆண்டாள் பல்லக்கில் எழுந்தருளி கோவில் உள்பிரகாரத்தில் புறப்பாடாகி சென்று மறுபடியும் சன்னதிக்கு வந்து இருப்பிடம் சேர்ந்தார். விழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story