ஆவின் லாரி டிரைவர் பணியிடை நீக்கம்
திண்டுக்கல்லில் ஆவின் பால் திருடுவது போன்ற வீடியோ பரவியதை தொடர்ந்து லாரி டிரைவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
ஆவின் பால் திருட்டு
திண்டுக்கல் தொழிற்பேட்டையில் ஆவின் பால் பதப்படுத்தும் நிலையம் உள்ளது. திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் சேகரிக்கப்படும் பால் இந்த நிலையத்தில் பதப்படுத்தப்பட்டு பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இங்கு தினமும் சுமார் 30 ஆயிரம் லிட்டர் வரை பால் பாக்கெட் பேக்கிங் செய்யப்படுகிறது.
அந்த பால் பாக்கெட்டுகள் பிளாஸ்டிக் டப்பாக்களில் நிரப்பப்பட்டு, விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த நிலையில் பிளாஸ்டிக் டப்பாக்களில் நிரப்பப்பட்ட பால் பாக்கெட்டுகளை ஒருவர் திருடுவது போன்ற வீடியோ நேற்று முன்தினம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இந்த வீடியோ அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
பணியிடை நீக்கம்
இதேபோல் ஆவின் அதிகாரிகளுக்கும் பெரும் அதிர்ச்சியை அளித்தது. இதையடுத்து ஆவின் பொதுமேலாளர் இளங்கோவன் உத்தரவின்பேரில் விசாரணை நடத்தப்பட்டது. இது தொடர்பாக நேற்று முன்தினம் ஊழியர் முகமது அஷ்ரப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் ஆவின் பால் லாரி டிரைவர் சிவசுப்பிரமணி என்பவரை நேற்று பொதுமேலாளர் இளங்கோவன் பணியிடை நீக்கம் செய்தார். இதன்மூலம் இதுவரை 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.