ஆவின் பால் விற்பனை 8 சதவீதம் உயர்வு
ஆவின் நிர்வாகத்தை சீரமைத்ததால், பால் விற்பனை 8 சதவீதம் உயர்ந்து இருப்பதாக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.
பால்வளத்துறை அமைச்சர்
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பால்வளத்துறை ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் பூங்கொடி தலைமை தாங்கினார். வேலுச்சாமி எம்.பி., காந்திராஜன் எம்.எல்.ஏ., இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்துகொண்டு ஆய்வு செய்தார். ஒ மேலும் கறவைமாடு கடன், போனஸ், ஊக்கத்தொகை உள்பட மொத்தம் 1,722 பேருக்கு ரூ.1 கோடியே 8 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் அமைச்சர் மனோ தங்கராஜ் பேசியதாவது:-
இளைஞர்கள்
திண்டுக்கல் மாவட்டத்தில் கால்நடைகள் அதிகமாக உள்ளன. எனவே கால்நடை வளர்ப்போருக்கு வங்கி கடன் கிடைக்க சிறப்பு முகாம் நடத்த வேண்டும். விவசாயிகள், இளைஞர்கள் கால்நடை வளர்ப்பு, ஆவின் பாலகம் தொடங்க வேண்டும். புதிதாக பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களை உருவாக்கி பால் உற்பத்தியை பெருக்கவும், செயல்படாத சங்கங்களை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் தினமும் 64 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. அதில் 29 ஆயிரத்து 487 லிட்டர் பால் விற்பனை செய்யப்பட்டு, 25 ஆயிரம் லிட்டர் பால் பதப்படுத்தப்பட்டு சென்னைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மாதந்தோறும் ரூ.81 லட்சத்துக்கு பால் உப பொருட்கள் விற்கப்படுகின்றன.
பால் உற்பத்தி
தமிழகத்தில் ஆவின் மூலம் தினமும் 31 லட்சம் லிட்டர் பால் கையாளப்படுகிறது. ஆவின் மேற்கொண்ட நடவடிக்கையால் மின்கட்டணம் ரூ.35 லட்சம் குறைந்துள்ளது. பால், பால் பொருட்களின் பயன்பாடு அதிகரித்து கொண்டே இருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திலகவதி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் காந்திநாதன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கோட்டைக்குமார், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய பொதுமேலாளர் இளங்கோவன், துணை பதிவாளர் இரணியன், மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா, பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
முன்னதாக திண்டுக்கல் தொழிற்பேட்டையில் செயல்படும் ஆவின் பால் பதப்படுத்தும் நிலையம், புளியமரத்துக்கோட்டை பால் உற்பத்தியாளர் சங்கம், பால் குளிரூட்டும் நிலையம், தீவன புல் சாகுபடி ஆகியவற்றை அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
விற்பனை உயர்வு
அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், "பால் மற்றும் பால் பொருட்களின் தேவை அதிகரித்துள்ளது. அதேநேரம் இந்திய அளவில் மேய்ச்சல் நிலத்தின் அளவு, விவசாயிகள் குறைவதால் பால் உற்பத்தி சவாலாக உள்ளது. எனவே தமிழகத்தில் கால்நடை பராமரிப்பு, கடன் மற்றும் மானியம் வழங்குதல், தீவன உற்பத்தியில் தீவிர கவனம் செலுத்துகிறோம். பால் பாக்கெட் பிளாஸ்டிக் பையை பற்றி கவலைப்பட தேவையில்லை. அது மறுசுழற்சிக்கு உட்படுத்தக்கூடியது. அதை ஒரேநாளில் மாற்றுவது சவாலானது. ஆவின் நிர்வாகம் மிகவும் வெளிப்படையாக நடக்கிறது. ஆவின் நிர்வாகம், மார்க்கெட்டிங் ஆகியவற்றை சீரமைத்து இருக்கிறோம். இதனால் ஆவின் பால் விற்பனை கடந்த மாதம் 8 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்த மாதம் மேலும் உயரும். நாட்டு மாடுகள் அழிந்து கொண்டு இருக்கின்றன. எனவே பால் உற்பத்தியை பெருக்க விவசாயிகளுக்கு தரமான கறவை மாடுகள் வழங்கப்படும்" என்றார்.