ஆய்க்குடி அமர்சேவா சங்க விழா; மத்திய மந்திரி பங்கேற்பு
தென்காசி அருகே ஆய்க்குடி அமர்சேவா சங்க விழா நடந்தது. விழாவில் மத்திய மந்திரி எல்.முருகன் பங்கேற்றார்.
தென்காசி அருகே ஆய்க்குடி அமர்சேவா சங்கத்தில் சோலார் பவர் சிஸ்டம் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு அமர் சேவா சங்க நிறுவனர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் சங்கரராமன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சக மந்திரி எல்.முருகன் கலந்து கொண்டு புதிய திட்டத்தை திறந்து வைத்தார். மேலும் சிறப்பு அழைப்பாளராக வேலம்மாள் குரூப் சேர்மன் முத்துராமலிங்கம் கலந்து கொண்டார்.
விழாவில் மத்திய மந்திரி எல்.முருகன் பேசுகையில், "இங்குள்ள குழந்தைகள் சிறப்பு குழந்தைகள் ஆகும். கடவுள் அளித்த வரப்பிரசாதம் ஆகும். நாமும் சாதிக்க முடியும் என்ற நிலையில் அவர்கள் செயல்பட்டு வருகிறார்கள். கடந்த 2016-ம் ஆண்டு பிரதமர் மோடி ஒரு சட்டம் இயற்றினார். அதன் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு திட்டங்கள் அளித்தார். பாரா ஒலிம்பிக்கில் பதக்கங்கள் நம் நாடு பெறுவதற்கு பிரதமர் ஏற்பாடு செய்தார். இங்குள்ள குழந்தைகளும் ஒலிம்பிக் பதக்கங்களை பெற வாழ்த்துகிறேன்" என்றார்.
விழாவில் சங்கத் துணைத் தலைவர் டாக்டர் முருகையா, கமிட்டி உறுப்பினர்கள் பட்டம்மாள், நாராயணன் பா.ஜ.க. மாவட்ட தலைவர் ராஜேஷ் ராஜா, துணைத் தலைவர் முத்துக்குமார், வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு மாநில துணைத்தலைவர் ஆனந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சங்க இணை செயலாளர் விஸ்வநாதன் கணேசன் நன்றி கூறினார்.