கைவிட்ட பருவமழை...கண்ணீரில் விவசாயிகள்
குடிமங்கலம் பகுதியில் பருவமழைகள் போதிய அளவில் பெய்யாத நிலையில் ஏற்பட்ட வறட்சியால் தென்னை மரங்கள் காய்ந்து கருகி வருகின்றன.
போடிப்பட்டி
குடிமங்கலம் பகுதியில் பருவமழைகள் போதிய அளவில் பெய்யாத நிலையில் ஏற்பட்ட வறட்சியால் தென்னை மரங்கள் காய்ந்து கருகி வருகின்றன.
நிலைப்பயிர்
தென்னையைப் பெத்தா இளநீரு...பிள்ளையை பெத்தா கண்ணீரு...என்பது மிகவும் பிரபலமான திரைப்படப் பாடலாகும். அதாவது பெற்ற பிள்ளையை விட கூடுதல் பலனைத் தரக்கூடியது தென்னை மரம் என்ற கருத்தை இந்த பாடல் வலியுறுத்தியுள்ளது. ஆனால் இன்றைய நிலையில் பல நூறு தென்னையை வைத்திருக்கும் விவசாயியும் கண்ணீருடன் காலத்தை கழிக்க வேண்டிய நிலையே உள்ளது. அடி முதல் நுனி வரை பலன் தரக்கூடிய கற்பகத் தருவான பனை மரங்களுக்கு இணையாக பலன் தரக்கூடியது என்று தென்னை மரங்களை சுட்டிக் காட்டுவார்கள். ஆனால் இன்றைய நிலை என்ன? தென்னை மரங்கள் தன் நிலையிலிருந்து மாறாமல் இளநீர், தேங்காய், பதநீர் என வாரிக் கொடுத்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் அதன் பலனை விவசாயிகளால் அனுபவிக்க முடியவில்லை.
தேங்காய், கொப்பரை, உரிமட்டை உள்ளிட்ட எந்த பொருளுக்கும் போதிய விலை இல்லாத நிலை நீடிக்கிறது. இதனால் வருவாய் இழப்பை சந்தித்துள்ள விவசாயிகள், நிலைப்பயிரான தென்னையை விடவும் முடியாமல், வைத்திருக்கவும் முடியாமல், புலி வாலைப் பிடித்தது போல தவித்து வருகிறார்கள். இப்படிப்பட்ட சிக்கலான சூழ்நிலையில் பருவமழையும் கைவிட்டதால் குடிமங்கலம் பகுதியில் பாசன நீருக்கான பற்றாக்குறை பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இதனால் ஏராளமான தென்னை மரங்கள் தண்ணீர் இல்லாமல் காய்ந்து கருகி வருகின்றன.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
தேங்காய் விலை
விவசாயப் பணிகளுக்கு ஆட்கள் பற்றாக்குறை நிலவி வருவதால், பலரும் தென்னை சாகுபடிக்கு மாறி வருகின்றனர். ஆனால் தென்னையை ஏன் நட்டோம் என்று வேதனைப்படும் நிலையே உள்ளது. கடந்த காலங்களில் ஒவ்வொரு ஆண்டிலும் தேங்காய் வரத்து அதிகரிக்கும் சில மாதங்களில் மட்டுமே விலை குறைவு இருக்கும். பின்னர் மீண்டும் சீரான விலை கிடைக்கத் தொடங்கி விடும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே தேங்காய்க்கு உரிய விலை கிடைக்காத நிலையே உள்ளது. தேங்காய் மற்றும் கொப்பரை விலை சரியும் காலங்களில், மத்திய அரசு நிறுவனமான நேபட் மூலம் கொப்பரை கொள்முதல் செய்யப்படும். அரசு கொள்முதல் மையங்களில் கொப்பரை கொள்முதல் தொடங்கியதும் வெளி சந்தையிலும் கொப்பரை விலை உயரத் தொடங்கி விடும்.தற்போது அதுவும் நடப்பதில்லை.
கருகும் மரங்கள்
அடி மேல் அடி வாங்கி தென்னை விவசாயிகள் தவித்து வரும் நிலையில் பாசன நீருக்கான பற்றாக்குறை மிகப்பெரிய பிரச்சினையாக முன் நிற்கிறது. குடிமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் தென்னை சாகுபடி அதிக அளவில் உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இந்த பகுதியில் ஏற்பட்ட கடும் வறட்சியால் பல ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள் காய்ந்து கருகின. இதனால் பல விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்து விவசாயத்தை விட்டே வெளியேறும் நிலை ஏற்பட்டது. அதுபோல தற்போது தென்மேற்குப் பருவமழை இந்த பகுதியை முழுவதுமாக கைவிட்ட நிலையில் ஏரி, குளங்கள் வறண்டுள்ளது. நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்துக்கு சென்றுள்ளது. இதனால் காய்கறிகள் உள்ளிட்டவற்றை சாகுபடி செய்யும் விவசாயிகள் சாகுபடிப் பணிகளை நிறுத்தியுள்ளனர்.
தென்னை விவசாயிகள் சொட்டுநீர்ப் பாசனம் உள்ளிட்ட சிக்கன நீர்ப்பாசன முறைகளைப் பயன்படுத்தி வறட்சியால் காயும் தென்னைகளை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.ஒருசில விவசாயிகள் தண்ணீரை விலைக்கு வாங்கி ஊற்றி தென்னை மரங்களை காப்பாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளனர். மேலும் ஒருசில விவசாயிகள் இருக்கும் நீரை ஒட்டுமொத்த மரங்களுக்கும் பகிர்ந்தளித்து அனைத்து மரங்களையும் காய விடுவதை விட பாதி மரங்களையாவது காப்பாற்றலாம் என்ற எண்ணத்தில் மீதி மரங்களை கைவிட்டுள்ளனர். பாடுபட்டு...பார்த்துப் பார்த்து வளர்த்த தென்னை மரங்கள் கண்முன்னே கருகுவதை கையாலாகாத நிலையில் பார்த்து கண்ணீர் விடுவதைத் தவிர என்ன செய்ய முடியும்'என்று விவசாயிகள் தெரிவித்தனர்.