உதவித்தொகை வாங்கி தருவதாக ஏமாற்றி மூதாட்டியிடம் நகை அபேஸ்; 2 பேர் கைது
உதவித்தொகை வாங்கி தருவதாக ஏமாற்றி மூதாட்டியிடம் நகையை அபகரித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருப்பரங்குன்றம்
உதவித்தொகை வாங்கி தருவதாக ஏமாற்றி மூதாட்டியிடம் நகையை அபகரித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
முதியோர் உதவித்தொகை
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கள்ளிக்குடி ெரயில்வே பீடர் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி. இவரது மனைவி ரஞ்சிதம் (வயது 58). குடும்ப தகராறு காரணமாக கணவன்-மனைவி இருவரும் கடந்த 8 ஆண்டுகளாக பிரிந்து வசித்து வருகின்றனர். ரஞ்சிதத்திற்கு கண்ணில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக சிந்தாமணி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வந்தார். அங்கு 35 வயது மதிக்கத்தக்க ஒருவர் ரஞ்சிதத்திடம் நைசாக பேச்சு கொடுத்தார். அவர் வயதான காலத்தில் ஏன் அலைகிறீர்கள் என கேட்டுள்ளார். மேலும் அவரது குடும்ப விவரத்தை முழுவதும் கேட்டுக்கொண்டு உங்களுக்கு முதியோர் உதவித்தொகை வாங்கித் தருவதாக ஆசைவார்த்தை கூறினார். மேலும் அவரை திருமங்கலம் வர சொல்லி ஒரு தொலைபேசி எண்ணையும் கொடுத்து அனுப்பியுள்ளார்.
தனக்கு முதியோர் உதவித்தொகை கிடைக்கும் என்ற ஆசையில் ரஞ்சிதம் மறுநாள் அந்த எண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது திருநகரில் உள்ள பிரபல வங்கிக்கு 12 மணிக்கு வர வேண்டும். அங்கு உங்களை போட்டோ எடுத்து முதியோர் உதவித்தொகைக்கு விண்ணப்பம் அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இவரும் அதனை நம்பி அங்கு சென்றுள்ளார். அப்போது அவருடன் மற்றொருவரும் இருந்துள்ளார். அவர்கள் அங்கு விண்ணப்பம் செய்யும் போது கழுத்து, காது மற்றும் கைகளில் எந்த நகையும் அணிந்திருக்க கூடாது. ஏழ்மையாக இருந்தால் மட்டுமே முதியோர் உதவித்தொகை கிடைக்கும் என கூறி அவரது காதில் அணிந்திருந்த அரை பவுன் தோடை கழற்றி வாங்கினர். பின்னர் அவரது செல்போனையும் வாங்கி கொண்டு அருகில் உள்ள கடையில் ஆன்லைன் விண்ணப்பம் வாங்கி வருகிறேன் என்று கூறி விட்டு சென்றனர்.
2 பேர் கைது
நீண்ட நேரம் ஆகியும் அந்த நபர்கள் வராததால் தான் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்த ரஞ்சிதம் வங்கி அதிகாரியிடம் முறையிட்டுள்ளார். மேலும், வங்கியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் உதவியுடன் திருநகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் அதனை ஆய்வு செய்த போது கப்பலூரைச் சேர்ந்த சரவணகுமார், விளாச்சேரியைச் சேர்ந்த கார்த்திக் என தெரியவந்தது. பின்னர் போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இவர்கள் வயதானவர்களிடம் முதியோர் உதவித்தொகை, வங்கி கடன் ஆகியவற்றை வாங்கித் தருவதாக கூறி அவர்களிடம் நூதனமுறையில் பணம், நகை, செல்போன் உள்ளிட்டவைகளை பறித்து சென்று உல்லாசமாக இருந்தது தெரியவந்தது.
மேலும் இவர்கள் மீது மதுரை மாவட்டம் மட்டுமல்லாமல் தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வழக்குகள் நிலுவையில் உள்ளது.