பரிகார பூஜை செய்வதாக கூறி பெண்ணிடம் 3 பவுன் நகை அபேஸ்
பரிகார பூஜை செய்வதாக கூறி பெண்ணிடம் 3 பவுன் நகை அபேஸ் செய்த மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.
குனியமுத்தூர்
கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் அகிலா (வயது 25). இவர் நேற்று முன்தினம் மதியம் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அங்கு வந்த 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் தான் ஜோதிடர் என்று தெரிவித்து உள்ளார். இதனை நம்பிய அந்த பெண் தன்னுடைய ஜாதகம் எப்படி உள்ளது என்பது குறித்து பார்க்க விரும்பினார். இதனால் தனது ஜாதகத்தை எடுத்து அந்த வாலிபரிடம் கொடுத்தார். அந்த ஜாதகத்தை வாங்கி பார்த்த வாலிபர், அகிலாவிடம் உங்களது ஜாதகத்தில் தோஷம் உள்ளது. எனவே அந்த தோஷம் நீங்க சிறப்பு பரிகார பூஜை செய்ய வேண்டும். அதற்கு நீங்கள் வீட்டில் இருந்து ஒரு தட்டு எடுத்து வாருங்கள் என தெரிவித்தார்.
இதனை நம்பிய அந்த பெண், ஜோதிடர் கேட்ட பொருட்களை வீட்டில் இருந்து எடுத்து கொடுத்தார். உடனே அவர் தோஷம் நீங்க பூஜை செய்யும் போது கழுத்தில் நகைகள் அணிந்திருக்க கூடாது எனவே அதனை கழற்றி தட்டில் வைக்குமாறு கூறினார். இதனையடுத்து அகிலா தான் அணிந்திருந்த 3 பவுன் தங்க செயினை கழற்றி தட்டில் வைத்தார். மீண்டும் அந்த நபர் ஒரு டம்ப்ளரில் தண்ணீர் கொண்டு வருமாறு கூறினார். இதனால் அகிலா தண்ணீர் எடுக்க சமையல் அறைக்கு சென்றார். இதையடுத்து கண் இமைக்கும் நேரத்தில் ஜோதிடர் அங்கிருந்து நகையுடன் தப்பி ஓடி விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அகிலா இதுகுறித்து கோவை குனியமுத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.