ஏ.டி.எம்.மில் பணம் எடுத்து தருவதாக கூறி மூதாட்டியிடம் ரூ.50 ஆயிரம் அபேஸ்
ஏ.டி.எம்.மில் பணம் எடுத்து தருவதாக கூறி மூதாட்டியிடம் ரூ.50 ஆயிரம் அபேஸ் செய்த மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.
சிங்காநல்லூர்
கோவை சிங்காநல்லூர் எஸ்.ஐ.எச்.எஸ்.காலனி பெத்தேல் நகரை சேர்ந்தவர் பழனி முருகன். இவருடைய மனைவி ஜெயலட்சுமி (வயது 60). இவர் பணம் எடுப்பதற்காக சிங்காநல்லூரில் உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்துக்கு சென்றார். அவருக்கு எந்திரத்தில் பணம் எடுக்க தெரியாது என்பதால், அங்கு இருந்த நபரிடம் ஏ.டி.எம். கார்டை கொடுத்து பணம் எடுத்துக்கொடுக்க சொன்னார்.
உடனே அந்த நபர் ஜெயலட்சுமியிடம் இருந்து ஏ.டி.எம். கார்டை வாங்கியதுடன் ரகசிய எண்ணையும் கேட்டு பெற்றுக்கொண்டார். பின்னர் அந்த கார்டை எந்திரத்தில் போட்டுவிட்டு கார்டு வேலை செய்யவில்லை என்றுக்கூறி கார்டை அவரிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். பின்னர் சிறிது நேரம் கழித்து அவருடைய வங்கி கணக்கில் இருந்து ரூ.50 ஆயிரம் எடுக்கப்பட்டதாக ஜெயலட்சுமியின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வந்தது.
அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், வங்கிக்கு சென்று கூறினார். வங்கி அதிகாரிகள் அவர் வைத்திருந்த ஏ.டி.எம். கார்டை வாங்கி பார்த்தபோது அது வேறு கார்டு என்பது தெரியவந்தது. ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுத்து கொடுப்பதாக கூறிய நபர் வேறு கார்டை மூதாட்டியிடம் கொடுத்துவிட்டு, அந்த மூதாட்டியின் கார்டை பயன்படுத்தி அதில் இருந்து ரூ.50 ஆயிரம் எடுத்து அபேஸ் செய்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.