'அப்பாட் ஹெல்த்கேர்' மருந்து நிறுவனம் 5 ஆண்டு டெண்டரில் பங்கேற்க தடை -தமிழக அரசு உத்தரவு
மருந்து கொள்முதல் டெண்டரில் பல தகவல்களை மறைத்ததாக குற்றம்சாட்டி, ‘அப்பாட் ஹெல்த்கேர்’ என்ற மருந்து நிறுவனத்தை டெண்டரில் பங்கேற்க 5 ஆண்டு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
சென்னை,
தமிழகத்திற்குத் தேவையான மருந்துகளை கொள்முதல் செய்வதற்காக தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகம் (டி.என்.எம் எஸ்.சி.) டெண்டர் விட்டு அதன் மூலம் மருந்து சப்ளை நிறுவனங்களை தேர்வு செய்கிறது. அந்த வகையில் தேவைக்கான மருந்தை வாங்குவதற்கு சமீபத்தில் டெண்டர் விடப்பட்டது. இந்த டெண்டரில் அப்பாட் ஹெல்த்கேர் என்ற நிறுவனம் பங்கேற்றது.
ஆனால் இந்த கம்பெனி பற்றி அரசுக்கு புகார்கள் வந்தன. அதுகுறித்து தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகம் விசாரணை நடத்தியது. பின்னர் அப்பாட் ஹெல்த்கேர் நிறுவனத்தை டெண்டரில் பங்கேற்க 5 ஆண்டுகள் தடை விதித்து தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகம் உத்தரவிட்டு உள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகத்தின் மேலாண்மை இயக்குனர் தீபக் ஜேக்கப் கூறியதாவது:-
தடை விதித்தது ஏன்?
அப்பாட் நிறுவனம், ஏற்கனவே மத்திய கொள்முதல் முகமைகள் விதித்த தடையை எதிர்கொண்டு வருகிறது. பொதுவாக நாங்கள் டெண்டர் விடும்போது அதில் பங்கேற்கும் ஒவ்வொரு நிறுவனத்திடமும் சுய அறிவிப்பை கேட்போம். அந்த நிறுவனம் ஏற்கனவே வேறு முகமைகள் மூலமாக கருப்பு பட்டியலில் வைக்கப்பட்டு இருக்கிறதா? என்ற விவரம் கேட்கப்படும்.
ஆனால் நாங்கள் இதுபோன்ற விவரத்தை கேட்டபோது, ஏற்கனவே கருப்புப் பட்டியலில் அப்பாட் ஹெல்த்கேர் கம்பெனியின் பெயர் வைக்கப்பட்டதை அந்த நிறுவனம் கூறாமல் மறைத்துவிட்டது. இதுபற்றிய புகார் வந்ததும் விசாரணை நடத்தினோம். அப்போது பல முகமைகள் மூலம் அந்த நிறுவனம் கருப்பு பட்டியலில் வைக்கப்பட்ட விவரம் தெரிய வந்தது.
எனவே அப்பாட் நிறுவனத்திடம், கருப்பு பட்டியலில் வைக்கப்பட்டதன் காரணம் என்ன? என்று கேட்டோம். ஆனால் அந்த நிறுவனத்திடம் இருந்து திருப்திகரமான பதில் கிடைக்கவில்லை. ஆகவே இந்த நடவடிக்கையை எடுத்துள்ளோம். தேவைப்படும் மருந்தை நாங்கள் வேறு நிறுவனங்களிடம் இருந்து பெற்றுக்கொள்வோம். எனவே மருந்து கிடைப்பதில் சிக்கல் எழவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
ஏற்கனவே...
அப்பாட் ஹெல்த்கேர் நிறுவனம் முதன் முதலாக டி.ஜி.எச்.எஸ். என்ற முகமை மூலம் முதன்முதலாக 2018-ம் ஆண்டு ஏப்ரலில் கருப்பு பட்டியலில் வைக்கப்பட்டது. ஸ்ட்ரோமிக்ஸ் உள்ளிட்ட சில மருந்துகளை அப்பாட் நிறுவனம் வழங்கியதில், அவற்றின் தரம் சரியில்லை என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருந்தது.
அதைத்தொடர்ந்து அப்பாட் நிறுவனத்தை இ.எஸ்.ஐ.சி. முகமை கருப்பு பட்டியலில் வைத்தது. அதற்கு காரணம், டி.ஜி.எச்.எஸ். விதித்துள்ள தடை பற்றி இ.எஸ்.ஐ.சி. முகமையிடம் மறைத்ததாக குற்றம்சாட்டப்பட்டது என்பதுதான்.