வடசேரி பஸ் நிலையத்தில் பெற்றோருடன் தூங்கிய4 மாத ஆண் குழந்தை கடத்தல்


வடசேரி பஸ் நிலையத்தில் பெற்றோருடன் தூங்கிய4 மாத ஆண் குழந்தை கடத்தல்
x

வடசேரி பஸ் நிலையத்தில் பெற்றோருடன் தூங்கி கொண்டிருந்த 4 மாத ஆண் குழந்தையை கடத்திய மர்ம பெண் கண்காணிப்பு கேமராவில் சிக்கினார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

வடசேரி பஸ் நிலையத்தில் பெற்றோருடன் தூங்கி கொண்டிருந்த 4 மாத ஆண் குழந்தையை கடத்திய மர்ம பெண் கண்காணிப்பு கேமராவில் சிக்கினார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

4 மாத குழந்தை

நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் ஏராளமானோர் ஊசி, பாசி மாலை போன்றவற்றை வியாபாரம் செய்து வருகிறார்கள். இவர்கள் இரவு நேரத்தில் பஸ் நிலையத்திலேயே படுத்து தூங்குவது வழக்கம். அதன்படி தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியை சேர்ந்த முத்துராஜ் என்பவர் வடசேரி பஸ் நிலையத்தில் தனது மனைவி மற்றும் 4 மாத ஆண் குழந்தையுடன் தங்கி வியாபாரம் செய்து வருகிறார்.

இவர் நேற்றுமுன்தினம் இரவு தனது மனைவி மற்றும் குழந்தையுடன் தூங்கிக் கொண்டிருந்தார். அதிகாலையில் முத்துராஜ் கண்விழித்து பார்த்தபோது அருகில் தூங்கி கொண்டிருந்த குழந்தையை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அங்கிருந்தவர்களிடம் விசாரித்தார்.

கண்காணிப்பு கேமரா

அப்போது நள்ளிரவில் பெண் ஒருவர் குழந்தையை தூக்கி சென்றதாக கூறினர். இதனால் பதறிபோன முத்துராஜ் மற்றும் அவருடைய மனைவி ஆகியோர் வடசேரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

தொடர்ந்து போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைபற்றி ஆய்வு செய்தனர். அப்போது ஒரு கேமராவில் பெண் ஒருவர் கையில் குழந்தையுடன் நடந்து செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. அந்த பெண் யார்? அவர் எதற்காக குழந்தையை கடத்தினார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் மர்ம பெண்ணை வலைவீசி தேடிவருகின்றனர்.

சமீபத்தில் இதேபோன்று வடசேரி பஸ் நிலையத்தில் பெற்றோருடன் தூங்கி கொண்டிருந்த ஒரு வயதுடைய ஆண் குழந்தையை பெண் ஒருவர் கடத்தி செல்ல முயன்றார். அதனை கண்ட குழந்தையின் தாயார் சத்தம் போட்டார். உடனே அந்த பெண் குழந்தையை அங்கேயே போட்டுவிட்டு தப்பி சென்ற சம்பவம் அரங்கேறியது குறிப்பிடத்தக்கது.


Next Story