பேத்தியின் மஞ்சள் நீராட்டு விழாவுக்கு பொருட்கள் வாங்க சென்ற தொழிலாளி கடத்தல்; 3 பேர் கைது


பேத்தியின் மஞ்சள் நீராட்டு விழாவுக்கு பொருட்கள் வாங்க சென்ற தொழிலாளி கடத்தல்; 3 பேர் கைது
x

திட்டக்குடி அருகே பேத்தியின் மஞ்சள் நீராட்டு விழாவுக்கு பொருட்கள் வாங்க சென்ற தொழிலாளியை கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கடலூர்

ராமநத்தம்,

திட்டக்குடி அருகே உள்ள ஏ.அகரம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 55). தொழிலாளி. இவருக்கும் நண்பரான விருத்தாசலம் தொட்டிக்குப்பத்தை சேர்ந்த குமார்(45) என்பவருக்கும் இடையே பணம் கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக பிரச்சினை உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று கிருஷ்ணன் தனது பேத்தியின் மஞ்சள் நீராட்டு விழாவுக்கு பொருட்கள் வாங்குவதற்காக திட்டக்குடிக்கு சென்றார். இதையறிந்த குமார் உள்ளிட்ட 5 பேர் கொண்ட கும்பல் கிருஷ்ணனை மினிலாரியில் கடத்திச் சென்றனர். இதுகுறித்து கிருஷ்ணனின் மகன் அன்புச்செல்வன் கொடுத்த புகாரின் பேரில் திட்டக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கடத்தப்பட்ட கிருஷ்ணன் கீழச் செருவாய் கிராமத்தில் உள்ள ஒருவீட்டில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருபாலட்சுமி தலைமையிலான போலீசார் தகவல் கிடைக்க பெற்ற வீட்டுக்கு விரைந்து சென்றனர். போலீசார் வருவதை பார்த்ததும் அங்கிருந்த 5 பேர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். உஷாரான போலீசார் அவர்களை விரட்டிச் சென்றபோது 3 பேர் பிடிபட்டனர். 2 பேர் தப்பிஓடிவிட்டனர். வீட்டில் இருந்த கிருஷ்ணனையும் போலீசார் மீட்டனர். பிடிபட்ட நபர்களிடம் நடத்திய விசாரணையில், பணம் கொடுக்கல்- வாங்கல் பிரச்சினை காரணமாக கிருஷ்ணனை குமார் தலைமையிலான கும்பல் கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து குமார் மற்றும் கீழ செருவாயயை சோ்ந்த செல்வராஜ், ஆனந்தன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய பூமாலை, முருகன் ஆகியோரைவும் தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story