தூய்மை பணிக்கான தனியார் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்
முறையாக தூய்மை பணி செய்யாததால் தனியார் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என சோளிங்கர் நகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
நகராட்சி கூட்டம்
சோளிங்கர் நகராட்சி கூட்டம் நகராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் பழனி, ஆணையர் கன்னியப்பன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் 36 தீர்மானங்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியதாவது:-
கோபால்:- நகராட்சிக்கு உட்பட்ட திருத்தணி சாலை, வாலாஜா சாலை, கொண்டபாளையம், எசையனூர் பகுதியில் உள்ள மயானத்திற்கு ஆழ்துளை கிணறு, மின் மோட்டார், சுற்றுச் சுவர் அமைத்துத்தர வேண்டும். வணிக நிறுவனங்கள், கடைகளுக்கு வசூலிக்கப்படும் குப்பை வரி 100 ரூபாயை 50 ரூபாயாக குறைக்க வேண்டும்.
நகராட்சி வரவு செலவு கணக்குகளை நகராட்சி கூட்டங்களில் காண்பிக்க வேண்டும்.
ரத்து செய்ய வேண்டும்
ஆஞ்சநேயன்:- நகராட்சிக்கு உட்பட்ட 27 வார்டுகளில் குப்பைகளை அகற்றும் பணி தனியாருக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால் குப்பைகளை முறையாக அள்ளுவது இல்லை. குப்பைகளை தரம் பிரிக்காமல் நந்தியாற்றில் கொட்டி விடுகின்றனர். முறையாக தூய்மை பணி செய்யாத தனியார் ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்து, நகராட்சி தூய்மை பணியாளர்களை கொண்டே தூய்மை பணியை செய்ய வேண்டும்.
நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளில் இருந்தும் தினசரி வெளியேற்றப்படும் சுமார் 7 லட்சம் லிட்டர் கழிவு நீர் சுத்திகரிப்பு செய்யாமல் நேரடியாக நந்தி ஆற்றில் விடுவதால் அப்பகுதியில் நிலத்தடி நீர் மாசுபடுகிறது. துர்நாற்றம் வீசுவதோடு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. உடனடியாக சுத்திகரிப்பு நிலையத்தை சீரமைக்க வேண்டும். மழைக்காலம் வருவதால் கழிவுநீர் கால்வாய் அனைத்தையும் தூர்வார வேண்டும்.
குளத்தில் தேங்கும் கழிவு நீர்
ராதா வெங்கடேசன்:- எங்கள் வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் அடிக்கடி இரு சக்கர வாகனங்கள் திருடு போவது வழக்கமாக உள்ளது. குற்றச்செயல்கள் நடைபெறாமல் இருக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்.
சிவானந்தம்:- 27 வார்டுகளிலும் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர், மின்விளக்கு, கழிவுநீர் கால்வாய் வசதி ஏற்படுத்தி, கழிவுநீர் கால்வாயை தூர்வாரி, கொசு மருந்து தெளிக்க வேண்டும்.
அன்பரசு:- 30 ஆண்டுக்கு முன்பு குடிநீர் குளமாக இருந்த நரைகுளத்தில் தற்போது கழிவுநீர் தேங்கி உள்ளது. இந்த குளத்தை தூர்வார வேண்டும்.
இவ்வாறு உறுப்பினர்கள் பேசினர்.
இதனைத் தொடர்ந்து நகர மன்ற உறுப்பினர்கள் வைத்த கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக நகராட்சி தலைவர் தெரிவித்தார்.