சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்
வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதான சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
சூலூர்
வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதான சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
வாய்த்தகராறு
கோவையை அடுத்த சூலூர் அருகே சந்தமநாயக்கன்பாளையத் தை சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவருடைய மகன் பஞ்சலிங்கம்.
இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஜெயப்பிரகாஷ், அவருடைய தாய் ஆகியோருக்கும் இடையே கடந்த 22-ந் தேதி டிப்பர் லாரி நிறுத்துவது சம்பந்தமாக வாய்த்தகராறு ஏற்பட்டது.
இது தொடர்பாக ஜெயப்பிரகாஷ் சுல்தான்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் சுல்தான்பேட்டை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் (வயது 58) என்பவர் பஞ்சலிங்கத்தை செல்போனில் பேசி, உங்கள் மீது புகார் வந்து உள்ளது.
அது தொடர்பாக விசாரிக்க வேண்டி உள்ளது. எனவே உடனே போலீஸ் நிலையத்துக்கு வாருங்கள் என கூறி உள்ளார்.
பணியிடை நீக்கம்
அங்கு இரு தரப்பினரிடமும் அவர் விசாரணை நடத்தினார். அதன்பிறகு அவர், புகார் பெறப்பட்டதற்கான சி.எஸ்.ஆர். ரசீது வழங்கினார். இதையடுத்து புகாரின் மீது வழக்கு பதிவு செய்யா மல் இருக்க பஞ்சலிங்கத்திடம் கடந்த 25-ந் தேதி ரூ.4 ஆயிரம் லஞ்சமாக வாங்கினார்.
அப்போது மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரனை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
இதைத்தொடர்ந்து ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதான சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரனை பணியிடை நீக்கம் செய்து கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் உத்தரவிட்டார்.