20 ஆண்டுகளாக துபாய் நாட்டில் தலைமறைவாக இருந்தவர்: தேடப்பட்ட குற்றவாளி சென்னை விமான நிலையத்தில் சிக்கினார்
தஞ்சாவூரில் திருட்டு வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி 20 ஆண்டுகளாக துபாய் நாட்டில் தலைமறைவாக இருந்த நிலையில், சென்னை திரும்பியபோது பிடிபட்டார்.
ஆலந்தூர்,
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து வந்த விமானத்தில் வந்து இறங்கிய பயணிகளின் ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரவிக்குமார் (வயது 43), என்பவரது பாஸ்போர்ட்டை குடியுரிமை அதிகாரிகள் ஆய்வு செய்த போது, அவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சாவூா், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பல்வேறு திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்டவர் என்பது தெரியவந்தது.
இதனால் தேடப்படும் குற்றவாளி என தஞ்சாவூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அறிவித்து விமான நிலையங்களுக்கும் லுக்-அவுட் நோட்டீஸ் அனுப்பி இருந்தது தெரியவந்தது.
தஞ்சாவூர் போலீசில் ஒப்படைப்பு
முன்னதாக கடந்த 2003-ம் ஆண்டு போலீசார் தேடுவதை அறிந்து 23 வயதில் வெளிநாட்டிற்கு சென்ற ரவிக்குமார் கடந்த 20 ஆண்டுகளாக டிரைவராக அங்கு வேலை பார்த்துள்ளார். 20 ஆண்டுகள் ஆகிவிட்டதால் இனிமேல் போலீசாா் தன்னை தேட மாட்டார்கள் என்று கருதி 43-வது வயதில் இந்தியா திரும்ப முடிவு செய்து துபாயில் இருந்து சென்னை வந்த ரவிக்குமாரை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் மடக்கி பிடித்தனர்.
இதையடுத்து பிடிபட்ட குற்றவாளி குறித்து குடியுரிமை அதிகாரிகள் தஞ்சாவூர் மாவட்ட போலீசாருக்கு தகவல் கொடுத்தனா். அங்கிருந்து தனிப்படை போலீசார் சென்னை விமான நிலையத்திற்கு வந்து ரவிக்குமாரை கைது செய்து அழைத்து சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மற்றொரு சம்பவம்
அதேபோல், சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு செயின் பறிப்பில் ஈடுபட்டதாக அரியலூர் சேர்ந்த புலித்தேவன் (23) உட்பட 3 பேரை விமான நிலைய போலீசார் கைது செய்தனா். இந்த வழக்கு மீதான விசாரனை ஆலந்தூர் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் ஜாமீனில் வெளிவந்த புலித்தேவன் கடந்த 2 ஆண்டுகளாக விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து புலித்தேவனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தும்படி சென்னை விமான நிலைய போலீசாருக்கு ஆலந்தூர் கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து சென்னை விமான நிலைய போலீஸ் உதவி கமிஷனர் புகழ்வேந்தன், இன்ஸ்பெக்டர் பாண்டி தலைமையில் தனிப்படை போலீசார் புலித்தேவனை அரியலூரில் வைத்து கைது செய்தனர். பின்னர் ஆலந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனா்.