தலைமறைவான கேரள வாலிபர் போலீசில் சரண்


தலைமறைவான கேரள வாலிபர் போலீசில் சரண்
x
தினத்தந்தி 11 Jun 2023 2:45 AM IST (Updated: 11 Jun 2023 2:45 AM IST)
t-max-icont-min-icon

பந்தலூர் அருகே டாஸ்மாக் கடையில் நடந்த கொள்ளை முயற்சி வழக்கில், தலைமறைவான கேரள வாலிபர் போலீசில் சரண் அடைந்தார்.

நீலகிரி

பந்தலூர்

பந்தலூர் அருகே டாஸ்மாக் கடையில் நடந்த கொள்ளை முயற்சி வழக்கில், தலைமறைவான கேரள வாலிபர் போலீசில் சரண் அடைந்தார்.

கொள்ளையர் மீது துப்பாக்கிச்சூடு

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே குந்தலாடியில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த மதுக்கடை கடந்த மாதம் 26-ந் தேதி அதிகாலையில் திறந்து இருந்தது. இதை அந்த வழியாக ரோந்து வந்த போலீசார் பார்த்து சந்தேகம் அடைந்தனர். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது, கடைக்குள் 3 பேர் நின்றிருந்தனர். அவர்கள் மதுபாட்டில்களை எடுத்து சாக்குப்பையில் நிரப்பி கொண்டு இருந்ததோடு, பணப்பெட்டியை உடைத்து திருடிக்கொண்டும் இருந்தனர்.

இதனால் போலீசார் அவர்களை பிடிக்க முயன்றனர். உடனே 3 பேரும், போலீசாரை கத்தியை காட்டி மிரட்டினர். மேலும் மதுபாட்டில்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் போலீஸ்காரர்கள் அன்பழகன், ஷியாபுதீன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதனால் தற்காப்புக்காக போலீசார், அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் ஒருவரின் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. மற்ற 2 பேரும் தப்பி ஓடி தலைமறைவாகினர்.

விசா முடக்கம்

பிடிபட்ட, பந்தலூர் தாலுகா பாட்டவயல் அருகே கொட்டாடு பகுதியை சேர்ந்த மணி என்ற சாம்பார் மணியை கைது செய்தனர். அவரிடம் இருந்து மதுபாட்டில்கள், ரூ.35 ஆயிரம் மீட்கப்பட்டது. தப்பி ஓடியது ஜிம்பிஜோஸ், கேரள மாநிலம் கோழிக்கோடு தாமரைசேரியை சேர்ந்த குஞ்சுபாவா என்ற ரஹீனாசுதீன் (வயது 29) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து தப்பி ஓடிய 2 பேரை பிடிக்க தேவாலா போலீஸ் துணை சூப்பிரண்டு செந்தில்குமார் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் அவர்களை வலைவீசி தேடி வந்தனர். இதற்கிடையே அவர்கள் கேரளாவில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் கேரளாவுக்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்தநிலையில் குஞ்சுபாவா மும்பை வழியாக சவுதி அரேபியாவுக்கு தப்பி செல்ல முயற்சிப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கூடலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள் தலைமையிலான போலீசார் மும்பைக்கு விரைந்து சென்று மும்பை போலீசார் உதவியுடன் குஞ்சுபாவாவின் பாஸ்போர்ட், விசாவை முடக்கினர்.

போலீசில் சரண்

இதையடுத்து நேற்று குஞ்சுபாவா நெலாக்கோட்டை போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். பின்னர் அவர் கூடலூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் ஜிம்பிஜோசை தொடர்ந்து போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story