போலி ஆதார் அட்டையை கொடுத்துதவணை முறையில் ஏ.சி. வாங்க முயன்ற 2 பேர் கைது

திண்டிவனத்தில் போலி ஆதார் அட்டையை கொடுத்து தவணை முறையில் ஏ.சி. வாங்க முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
திண்டிவனம்,
புதுச்சேரி மாநிலம் ரெட்டியார் பாளையத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 36), இவரது நண்பர் முனுசாமி (29). இவர்கள் 2 பேரும் திண்டிவனத்தில் ஒரு வணிக வளாகத்தில் உள்ள வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடைக்கு சென்றனர். பின்னர் அங்கு தவணை முறையில் தனியார் பைனான்ஸ் நிறுவனம் மூலம் ஏ.சி. வாங்க முடிவு செய்தனர். அதன்படி ஏ.சி. வாங்க தனியார் நிறுவன ஊழியரிடம் முனுசாமியின் ஆதார் அட்டையை அவர்கள் கொடுத்தனர். அதனை ஊழியர்கள் சரிபார்த்தபோது, அது போலியானது என்பது தெரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், ஜெயக்குமாரின் ஆதார் அட்டையை வாங்கி சரிபார்த்தபோது, அதுவும் போலி என்பது தெரிந்தது. இதையடுத்து இருவரையும் பிடித்து திண்டிவனம் போலீசில் ஓப்படைத்தனர். அதனை தொடர்ந்து பிடிபட்ட 2 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். அதி்ல் அவர்கள் போலி ஆதார் அட்டையை கொடுத்து தவணை முறையில் ஏசி வாங்க முயன்றது தெரிந்தது.
கைது
மேலும் இதில் ஜெயக்குமார் ஏற்கனவே ஒரு முறை போலி ஆதார் அட்டையை கொடுத்து செல்போன் வாங்கிச்சென்றதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் திண்டிவனம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.