போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு
போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கும் நோக்கில் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி மற்றும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கலெக்டர் கார்மேகம் தலைமையில் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்கப்பட்டது. உறுதிமொழியை கலெக்டர் வாசிக்க, அதனை அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தொடர்ந்து வாசித்து உறுதிமொழியினை ஏற்று கொண்டனர்.
மேலும், சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து மேல்நிலைப்பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து அரசுத்துறை அலுவலகங்களிலும் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது. நேரு யுகேந்திரா சார்பில் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதியில் போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் செல்வராஜ், உதவி ஆணையர் (கலால்) மாறன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ஜெகன்நாதன் உள்ளிட்ட அனைத்துத் துறை அரசு அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.