அச்சங்குளம் அரசு கூட்டுறவு நூற்பாலை உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை
அச்சங்குளம் அரசு கூட்டுறவு நூற்பாலை உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தெரிவித்தார்.
கமுதி,
அச்சங்குளம் அரசு கூட்டுறவு நூற்பாலை உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தெரிவித்தார்.
அமைச்சர் ஆய்வு
கமுதி அருகே அச்சங்குளம் ஊராட்சியில் மாவட்ட கூட்டுறவு நூற்பாலையை இணை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல் விழி செல்வராஜ் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது தமிழ்நாடு தாட்கோ நிறுவன இயக்குனர் கந்தசாமி, கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ், ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
. இந்த ஆய்வின்போது அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கூட்டுறவு நூற்பாலை எந்திரங்களின் செயல்பாடு மற்றும் உற்பத்தி திறன் குறித்து பார்வையிட்டார். தொடர்ந்து ஆலை செயல்பாடுகளை குறித்து நிர்வாக அலுவலரிடம் கேட்டறிந்தார்.
உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை
பின்னர் அமைச்சர் கூறியதாவது:-
தமிழகத்தில் தொடங்கப்பட்ட 5 கூட்டுறவு நூற்பாலைகளில் அச்சங்குளம் நூற்பாலையும் ஒன்று. இந்த ஆலையின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், உற்பத்தியை அதிகரிக்கவும் கூடுதல் எந்திரங்கள் பொருத்தி மற்றும் சோலார் மின் இணைப்பு வழங்கிட ரூ.10 கோடி தேவைப்படுகிறது. இது குறித்து தமிழக முதல்-அமைச்சர் கவனத்திற்கு எடுத்துச் சென்று ரூ.10 கோடி நிதி பெற்று தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் பரமக்குடி சப்-கலெக்டர் அப்தாப் ரசூல், கூட்டுறவு நூற்பாலை மேலாண்மை இயக்குனர் வஜ்ரவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.