ஓமலூர் அருகே சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு சென்று திரும்பிய வாலிபர் விபத்தில் பலி
ஓமலூர் அருேக சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு சென்று திரும்பிய வாலிபர் விபத்தில் சிக்கி பலியானார்.
ஓமலூர்:
உடல்நலம் பாதிப்பு
ஓமலூர் அடுத்த நடுப்பட்டி தளவாய்பட்டி ஆதிதிராவிடர் காலனி பகுதியை சேர்ந்தவர் குணசேகரன். இவருடைய மகன் சந்தோஷ்குமார் (வயது 21) நர்சிங் படித்துவிட்டு தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். இவருக்கு அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்டதால் அவரது பெற்றோர் நேற்று காலை சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்து பார்த்ததில் சந்தோஷ் குமார் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து சந்தோஷ் குமாரை மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு அனுப்பிவிட்டு பெற்றோர் பஸ்சில் தளவாய்பட்டிக்கு சென்றனர்.
விபத்தில் பலி
ஓமலூரை அடுத்த சிக்கனம் பட்டி ஊராட்சி நரிப்பள்ளம் அருகே சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில்சந்தோஷ் குமார் சென்றபோது சாலையின் தடுப்பு சுவர்களில் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. இதில் தூக்கி வீசப்பட்ட சந்தோஷ் குமார் பலத்த காயமடைந்து சிகிச்சைக்காக ஓமலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். விபத்து குறித்து ஓமலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய வாலிபர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.