சிப்காட் வேலைக்கு நேர்காணலுக்கு சென்றபோது விபத்து
சிப்காட் வேலைக்கு நேர்காணலுக்கு சென்றபோது விபத்தில் கர்ப்பிணி பலியானார்.
ஊத்தங்கரை:
ஊத்தங்கரை அருகே சிப்காட் வேலைக்காக நேர்காணலுக்கு சென்றபோது மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதி கணவர் கண் எதிரே கர்ப்பிணி மனைவி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இளம்பெண்
கிருஷ்ணகிரி மாவட்டம் நடுப்பட்டி ஊராட்சி நடுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆதித்யன். மருந்து விற்பனை பிரதிநிதி. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த கோவிந்தன் மகள் ரோஷிணி (வயது 20) என்பவருக்கும் திருமணமாகி 8 மாதங்கள் ஆகிறது. தற்போது இவர் 6 மாத கர்ப்பிணியாக இருந்தார். மேலும் இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் ரோஷிணி சென்னையில் இருந்து தொடர் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார்.
இதையடுத்து கணவன், மனைவி இருவரும் உள்ளூரில் வேசை செய்ய திட்டமிட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கணவன், மனைவி இருவரும் ஊத்தங்கரை அருகே ஓலைப்பட்டி சிப்காட் தொழிற்சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் நடந்த நேர்காணலில் பங்கேற்க மோட்டார் சைக்கிளில் சென்றனர். அப்போது கெரிகேப்பள்ளியில் உள்ள ெரயில்வே தரைப்பாலத்தில் சென்றபோது ஊத்தங்கரை நோக்கி சென்ற வாகனம் ஆதித்யன் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
பலி
இதில் பின்னால் அமர்ந்து சென்ற ரோஷிணி கீழே விழுந்து பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். தனது கண் எதிரே மனைவி பலியானதை கண்ட ஆதித்யன் கதறி அழுதார். மேலும் அவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடினார். இந்த விபத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள் ஆதித்யனை மீட்டு ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற ஊத்தங்கரை ேபாலீசார் ரோஷிணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிப்காட்டில் வேலை செய்ய நேர்காணலுக்கு கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற கர்ப்பிணி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.