பஸ் கவிழ்ந்து கல்லூரி மாணவர்கள் உள்பட 13 பேர் காயம்
வேதாரண்யம் அருகே பஸ் கவிழ்ந்து கல்லூரி மாணவர்கள் உள்பட 13 பேர் காயம் அடைந்தனர்.
வேதாரண்யம் அருகே பஸ் கவிழ்ந்து கல்லூரி மாணவர்கள் உள்பட 13 பேர் காயம் அடைந்தனர்.
மினி பஸ் கவிழ்ந்தது
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் இருந்து கத்தரிப்புலம் வரை மினிபஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த மினி பஸ் நேற்று மதியம் வேதாரண்யத்தில் இருந்து 30-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் புறப்பட்டு கத்தரிப்புலம் நோக்கி சென்று கொண்டிருந்தது.
வேதாரண்யம் அருகே கத்தரிப்புலம் சந்தையடி பகுதியில் ஒரு வளைவில் திரும்பியபோது எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், அங்கு உள்ள வயலில் கவிழ்ந்தது.
மாணவர்கள் உள்பட 13 பேர் காயம்
இந்த விபத்தில் வேதாரண்யம் அரசு கலைக்கல்லூரி மாணவ-மாணவிகள் தலைஞாயிறை சேர்ந்த அனுசியா(வயது 19), சீதா(18), அவரிக்காட்டை சேர்ந்த ஜோதிகா(19), சவுமியா(19), பிரியதர்ஷினி(19), வண்டல் பகுதியை சேர்ந்த விஜயராகவன்(18), கவுசல்யா(18), கீர்த்திகா(18), கத்தரிப்புலத்தை சேர்ந்த தேவிகா(19), அனுஷா(19), சத்தியசீலன்(19) மற்றும் நடேசன்(60) சாந்தி(38) ஆகிய 13 பேர் காயம் அடைந்தனர்.
பஸ் கவிழ்ந்ததும் அதில் இருந்தவர்கள் போட்ட அலறல் சத்தத்தை கேட்ட அக்கம், பக்கத்தினர் ஓடிச்சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை
அப்போது காயம் அடைந்த கல்லூரி மாணவ, மாணவிகள் உள்பட 13 பேரும் மீட்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் அனுசியா மேல் சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்த வேதாரண்யம் கோட்டாட்சியர் ஜெயராஜ பவுலின், தாசில்தார் ரவிச்சந்திரன், துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல், போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரியா மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் ஆஸ்பத்திரிக்கு சென்று காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.
இதுகுறித்து காரியாப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.