பனை மரத்தில் கார் மோதி டிரைவர் பலி; 8 பேர் காயம்
பனை மரத்தில் கார் மோதி டிரைவர் பலியானார். 8 பேர் காயம் அடைந்தனர்.
பனைக்குளம்,
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் முகவூர் பகுதியைச் சேர்ந்தவர், முனியாண்டி. இவர் உறவினர்களுடன் கார் ஒன்றில் ராமேசுவரம் கோவிலுக்கு புறப்பட்டார்.
இந்த காரை விருதுநகர் சொக்கநாதன்புதூர் பகுதியை சேர்ந்த தவிட்டுக்கனி (வயது 32) ஓட்டி வந்தார். கார் நேற்று அதிகாலையில் ராமநாதபுரம் அருகே உச்சிப்புளி ரெயில்வே கேட் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது.
அங்குள்ள ரெயில்வே கேட் அருகே சென்ற போது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் உள்ள பனை மரத்தில் கார் மோதியது. இந்த விபத்தில் டிரைவர் தவிட்டுக்கனி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காரில் இருந்த 8 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதுகுறித்து உச்சிப்புளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே இதே பகுதியில் கடந்த மாதம் வேன் ஒன்று பனை மரத்தில் மோதி ஒருவர் உயிரிழந்தார். பலர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே அந்த இடத்தில் எச்சரிக்கை பலகை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.