தலைவாசல் அருகே லாரி மோதி கல்லூரி மாணவர் பலி
தலைவாசல் அருகே லாரி மோதி கல்லூரி மாணவர் பலியானார்.
தலைவாசல்:
தலைவாசல் அருகே உள்ள மும்முடியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மனைவி சுமதி். இவர்களுக்கு பூபதி (வயது 22) என்ற மகனும், ஹேமாவதி (17) என்ற மகளும் இருந்தனர். சில ஆண்டுகளுக்கு முன்பு ராஜேந்திரன் இறந்து விட்டார்.
தற்போது பூபதி பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 4-ம் ஆண்டும், ஹேமாவதி ஒரு தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பும் படித்து வந்தனர். சுமதி பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் பூபதி கல்லூரிக்கு மொபட்டில் சென்று வந்துள்ளார். நேற்று கல்லூரி முடிந்து மொபட்டில் பூபதி வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது கள்ளக்குறிச்சியில் இருந்து கரும்பு பாரம் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வந்தது. தலைவாசல் அருகே இலுப்பநத்தம் பகுதியில் வந்த போது, எதிர்பாரதவிதமாக மொபட் மீது லாரி மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்த பூபதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து ஏற்பட்டவுடன் லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.
இது குறித்து வீரகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகிறார்கள். இதனிடையே மகனின் உடலை பார்த்து தாய் சுமதி, கதறி அழுதது கல்நெஞ்சையும் உருக்குவதாக இருந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.