பாம்பன் பாலத்தில் அரசு பஸ் மீது மோதிய ஆம்னி பஸ், தடுப்புச்சுவரில் மோதி நின்றது


பாம்பன் பாலத்தில் அரசு பஸ் மீது மோதிய ஆம்னி பஸ் தடுப்புச்சுவரில் மோதி நின்றது. இதில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

பாம்பன் பாலத்தில் அரசு பஸ் மீது மோதிய ஆம்னி பஸ் தடுப்புச்சுவரில் மோதி நின்றது. இதில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்.

அரசு பஸ்

ராமேசுவரத்தில் இருந்து மதுரைக்கு, நேற்று காலை 6.30 மணி அளவில் அரசு பஸ் ஒன்று 15-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் புறப்பட்டு சென்றது. அரசு பஸ்சை மதுரை அனுப்பானடி பகுதியை சேர்ந்த டிரைவர் மகாராஜா (வயது 43) ஓட்டினார்.

இந்த பஸ், கடல் நடுவே உள்ள பாம்பன் ரோடு பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ராமேசுவரம் நோக்கி ஆம்னி பஸ் ஒன்று வந்தது. அந்த பஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடியது. அப்போது தனியார் பஸ்சும்-அரசு பஸ்சும் நேருக்கு நேர் மோதின. மோதிய வேகத்தில் ஆம்னி பஸ், பாம்பன் ரோடு பாலத்தின் நடைபாதை மீது ஏறி மின்கம்பத்தை சாய்த்து தடுப்பு சுவரின் மீது மோதி நின்றது. பஸ்களில் இருந்த பயணிகள் அலறினர்.

மீ்ட்பு

தகவல் அறிந்ததும் பாம்பன் போலீசார், அப்பகுதி மக்கள், மீனவர்கள் விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

2 பஸ்களின் பயணிகளும் காயம் அடைந்திருந்தனர். அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ராமேசுவரம் அரசு மருத்துவமனை மற்றும் மண்டபம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து பாம்பன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விபத்தில் அரசு பஸ்சை ஓட்டிச்சென்ற மதுரை அனுப்பானடி பகுதியை சேர்ந்த மகாராஜா, கண்டக்டர் காளீஸ்வரன், சுப்பிரமணியன் (40) மற்றும் அந்த பஸ்சில் இருந்த சில பயணிகள் லேசான காயமடைந்தனர். ஆம்னி பஸ்சை ஓட்டி வந்த டிரைவருக்கும் படுகாயம் ஏற்பட்டது.

உயிர் தப்பினர்

இந்த விபத்து குறித்து அரசு பஸ்சில் வந்த சென்னையை சேர்ந்த சுமதி கூறியதாவது:-

ராமேசுவரம் கோவில் உண்டியல் எண்ணும் பணிக்காக வந்திருந்தோம். பணியை முடித்து விட்டு மீண்டும் சென்னை செல்வதற்காக ராமேசுவரத்தில் இருந்து மதுரை புறப்பட்ட அரசு பஸ்சில் 6 பேர் சேர்ந்து ஏறினோம். பாம்பன் ரோடு பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த தனியார் ஆம்னி பஸ், அரசு பஸ் மீது மோதியது. இதில் அதிர்ஷ்டவசமாக டிரைவரின் சாமர்த்தியத்தால் பஸ்சில் இருந்த பயணிகள் லேசான காயத்துடன் உயிர் தப்பி உள்ளனர். கடவுளுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விபத்து

பாம்பன் ரோடு பாலத்தில் ஆட்டோ, கார், வேன் உள்ளிட்ட எந்த ஒரு சுற்றுலா வாகனங்களையும் நிறுத்த வேண்டாம் என்று காவல்துறை தொடர்ந்து தெரிவித்து வரும் நிலையிலும் நேற்று இந்த விபத்து நடந்த இடத்தின் அருகே ரோடு பாலத்தில் ஆட்டோ, வேன் உள்ளிட்ட சில வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்ததாகவும், அப்போது சென்னையில் இருந்து ராமேசுவரம் நோக்கி வந்த தனியார் ஆம்னி பஸ் இந்த வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்ததால் சாலையில் வலது பக்கமாக ஏறி வந்ததாகவும் அந்த சமயத்தில் எதிரே வந்த அரசு பஸ் மீது எதிர்பாராத விதமாக மோதி விபத்து நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.

எனவே பாம்பன் ரோடு பாலத்தில் சுற்றுலா வாகனங்கள் நிறுத்துவதை நிரந்தரமாக காவல்துறை தடை செய்தால் மட்டுமே இது போன்ற விபத்துக்கள் நடைபெறுவதை தடுக்க முடியும். இனியாவது காவல்துறை கடுமையான அபராதம் விதித்து வாகனங்கள் நிறுத்தாத வகையில் நிரந்தரமாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.


Next Story