வளைகாப்புக்கு சென்று திரும்பிய 3 பேர் பலியானது பற்றி உருக்கமான தகவல்
அரசு பஸ்-கார் மோதிய விபத்தில் வக்கீல் மனைவி உள்பட 3 பேர் பலியான சம்பவம் குறித்து உருக்கமான தகவல்கள் தெரியவந்தன.
பரமக்குடி,
அரசு பஸ்-கார் மோதிய விபத்தில் வக்கீல் மனைவி உள்பட 3 பேர் பலியான சம்பவம் குறித்து உருக்கமான தகவல்கள் தெரியவந்தன.
வளைகாப்பு விழா
ராமநாதபுரம் கோட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் சோமசுந்தரம் (வயது 57) வக்கீல். இவருடைய 2-வது மகன் சர்வேஸ், கிருஷ்ணகிரியில் உள்ளார். அவருடைய மனைவிக்கு கிருஷ்ணகிரியில் வளைகாப்பு விழா நடந்தது. இந்த விழாவில் சோமசுந்தரம் தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டார்.
விழா முடிந்ததும் சோமசுந்தரம் தனது குடும்பத்தினருடன் அங்கிருந்து ராமநாதபுரம் நோக்கி காரில் புறப்பட்டு வந்தார். பரமக்குடி அருகே உள்ள அரியனேந்தல் நான்கு வழிச்சாலையில் வந்த போது அந்த காரும், ராமநாதபுரத்தில் இருந்து மதுரை நோக்கி வந்த அரசு பஸ்சும் திடீரென மோதிக்ெகாண்டன.
3 பேர் பலி
இதில் கார் நொறுங்கியது. காரில் இருந்த சோமசுந்தரத்தின் மனைவி மணிமேகலை, நிர்மலா என்ற கிருத்திகா(55), மற்றும் ராமநாதபுரம் அருகே முதுநாளையை சேர்ந்த கார் டிரைவர் செல்வகுமார் ஆகிய 3 பேரும் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். மேலும் சோமசுந்தரம், அவருடைய மகன் அர்ஜுன்(35), இவருடைய மனைவி ரஞ்சனி(34), இவர்களுடைய மகன் பாகல்ரியா(9), அயான் நன்விட் (7) ஆகிய 5 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து பற்றி தகவல் அறிந்ததும் போலீசாரும், தீயணைப்பு படை வீரர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்து நடந்த இடத்தில் மின்விளக்குகள் இல்லாததால் மீட்பு பணியில் சிரமம் ஏற்பட்டது.
ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இந்த மீட்பு பணி நடந்தது. படுகாயத்துடன் மீட்கப்பட்டவர்கள் பரமக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். பலியான 3 பேர் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டன.
கைது
இது குறித்து பரமக்குடி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி பகைவென்றி கிராமத்தை சேர்ந்த அரசு பஸ் டிரைவர் கேசவனை கைது செய்தனர்.
வளைகாப்புக்கு சென்று விட்டு சொந்த ஊர் திரும்பிய 3 பேர் பலியானது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.