சேலம் அருகே, மொபட் மீது அரசு பஸ் மோதல்: வெள்ளி பட்டறை தொழிலாளி நண்பருடன் பலி


சேலம் அருகே மொபட் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் வெள்ளி பட்டறை தொழிலாளி நண்பருடன் பலியானார். உறவினரின் மகன் பிறந்த நாளை கொண்டாட கேக் வாங்கி கொண்டு சென்ற போது இந்த பரிதாபம் நிகழ்ந்தது.

சேலம்

பனமரத்துப்பட்டி:

வெள்ளி பட்டறை தொழிலாளி

சேலம் அன்னதானப்பட்டி அருகே உள்ள மணியனூர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து. இவருடைய மகன் மோகன் (வயது 40), வெள்ளி பட்டறை தொழிலாளி. இதேபோல் சேலம் குகை பென்ஷன் லைன் ரோடு பகுதியை சேர்ந்தவர் அமீர். இவருடைய மகன் முஸ்தபா (வயது 37), ஆட்டோ டிரைவர். இவரும், மோகனும் நண்பர்கள் ஆவார்கள்.

இந்தநிலையில் நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரத்தில் வசிக்கும் மோகனின் உறவினர் ஒருவரின் மகனுக்கு நேற்று பிறந்த நாள் ஆகும். இதற்காக மோகன் சேலத்தில் இருந்து கேக் வாங்கிக்கொண்டு தனது தம்பியின் மொபட்டில் மல்லசமுத்திரம் செல்ல முடிவு செய்தார்.

அரசு பஸ் மோதி விபத்து

மேலும் மோகனுக்கு மொபட் ஓட்ட தெரியாததால் தனது நண்பரான ஆட்டோ டிரைவர் முஸ்தபாவை துணைக்கு அழைத்தார். இதையடுத்து அவர்கள் இருவரும் நேற்று மதியம் கேக் வாங்கிக்கொண்டு மொபட்டில் மல்லசமுத்திரம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். மொபட்டை முஸ்தபா ஓட்டிச்சென்றார்.

பகல் 12.30 மணியளவில் ஆட்டையாம்பட்டியை அடுத்த நைனாம்பட்டி காளியாக்கோவில் அருகே உள்ள வளைவில் மொபட்டை முஸ்தபா திருப்பினார்.

அப்போது அந்த வழியாக எதிரே மல்லசமுத்திரத்தில் இருந்து சேலம் நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பஸ் எதிர்பாராத விதமாக மொபட் மீது மோதியது.

2 பேர் பலி

இதில் பலத்த காயமடைந்த முஸ்தபா, மோகன் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இந்த விபத்து பற்றி தகவல் அறிந்த ஆட்டையாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்சவல்லி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முஸ்தபா, மோகன் ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உறவினரின் மகன் பிறந்த நாளை கொண்டாட கேக் வாங்கிய வெள்ளி பட்டறை தொழிலாளி, நண்பருடன் மொபட்டில் ெசன்ற போது விபத்தில் சிக்கி பலியான பரிதாப சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story