ஆட்டையாம்பட்டி அருகே தனியார் பஸ்-கார் மோதியதில் பெண் பலி-வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்ற போது பரிதாபம்
ஆட்டையாம்பட்டி அருகே தனியார் பஸ்-கார் மோதிய விபத்தில் பெண் பரிதாபமாக இறந்தார். 2 பேர் படுகாயம் அடைந்தனர். உறவினரின் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்ற போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
பனமரத்துப்பட்டி:
வளைகாப்பு
சேலம் மன்னார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 70), விவசாயி இவருடைய மனைவி வசந்தா (65). நேற்று காலை ஆட்டையாம்பட்டி அருகே உள்ள ராக்கிப்பட்டி செங்கோடம்பாளையம் பகுதியில் நடைபெற்ற உறவினர் ஒருவரின் இல்ல வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தனது காரில் கோவிந்தராஜ், மனைவி வசந்தா மற்றும் உறவுக்கார பெண்ணான லாவண்யா (27) ஆகியோருடன் சென்றுள்ளார்.
காரை கோவிந்தராஜ் ஓட்டி சென்றார். காலை 8.30 மணியளவில் சேலம்-கோவை நெடுஞ்சாலையில் செங்கோடம்பாளையம் பிரிவு ரோட்டில் சென்ற போது காரை திடீரென இடதுபுறம் கோவிந்தராஜ் திருப்பி உள்ளார். அப்போது சேலத்தில் இருந்து ஈரோடு நோக்கி சென்ற தனியார் பஸ் இவர்கள் சென்ற கார் மீது எதிர்பாராதவிதமாக பயங்கரமாக மோதி காரை இழுத்துச்சென்றது. பஸ் மோதிய வேகத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது.
சாவு
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த கோவிந்தராஜ், வசந்தா, லாவண்யா ஆகியோரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் வசந்தா ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். கோவிந்தராஜ், லாவண்யா ஆகியோர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து பற்றி தகவல் கிடைத்ததும், ஆட்டையாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்சவள்ளி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வசந்தாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். புத்தாண்டு தினமான நேற்று உறவினரின் வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றபோது கார் விபத்தில் சிக்கி பெண் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.