சிவகங்கை அருகே விபத்துஅரசு பஸ்-லாரி பயங்கர மோதல்; 3 பெண்கள் பலி, 14 பேர் படுகாயம்


தினத்தந்தி 4 April 2023 12:15 AM IST (Updated: 4 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை அருகே அரசு பஸ்- லாரி மோதிக்ெகாண்ட பயங்கர விபத்தில் 3 பெண்கள் பலியானார்கள். 14 பேர் படுகாயம் அடைந்தனர்.

சிவகங்கை

சிவகங்கை

சிவகங்கை அருகே அரசு பஸ்- லாரி மோதிக்ெகாண்ட பயங்கர விபத்தில் 3 பெண்கள் பலியானார்கள். 14 பேர் படுகாயம் அடைந்தனர்.

பஸ்-லாரி மோதல்

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் இருந்து நேற்று காலை மதுரை நோக்கி அரசு பஸ் ஒன்று புறப்பட்டது. அந்த பஸ்சை திருப்புவனத்தை சேர்ந்த டிரைவர் ஈசுவரன் (44) ஓட்டினார்.

கண்டக்டராக சிவகங்கையை சேர்ந்த சந்திரன் (50) பணியாற்றினார். அந்த பஸ் நேற்று மதியம் 12.30 மணி அளவில் சிவகங்கையை அடுத்த பூவந்தி அருகே குயவன்குளம் பகுதியில் வந்தது. அப்போது எதிரே சிமெண்டு செங்கல் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்றும் வந்தது. திடீரென அந்த பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதிக்கொண்டன.

இதில் பஸ் பலத்த சேதம் அடைந்தது. லாரி கவிழ்ந்து கிடந்தது. பஸ்சில் இடிபாடுகளுக்குள் சிக்கி பயணிகள் அலறினார்கள். அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் உடனடியாக இது குறித்து 108 ஆம்புலன்சுக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்ததோடு மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

3 பெண்கள் பலி

காயம் அடைந்தவர்கள் ஒவ்வொருவராக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி, போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் ஆகியோரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணிகளை துரிதப்படுத்தினார்கள்.

இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் கீழக்கோட்டையை சேர்ந்த கொந்தசாமியின் மனைவி திருப்பதி(வயது 60) பலியானார்.

சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி சிவகங்கையை அடுத்த ராகினிபட்டியைச் சேர்ந்த முத்துப்பாண்டி என்பவரது மகள் கங்கா (24) மற்றும் மீமிசல் பகுதியை சேர்ந்த சோலைராஜ் என்பவரது மனைவி நாகஜோதி (45) ஆகிய 2 பேரும் உயிரிழந்தனர். இதனால் இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 3-ஆக உயர்ந்தது.

14 பேர் படுகாயம்

நாட்டரசன்கோட்டையை சேர்ந்த திவ்யா (29), அரசு பஸ் டிரைவர் ஈசுவரன், கண்டக்டர் சந்திரன், ஆர்.எஸ்.மங்கலத்தைச் சேர்ந்த எல்லம்மாள் (70), பலியான திருப்பதியின் கணவர் கொந்தசாமி (65), சிவகங்கை குமரன் தெருவை சேர்ந்த வெங்கடேசன் (22). சிவகங்கை முத்து நகரை சேர்ந்த ஆனந்த வள்ளி (18), லாரி டிரைவரான திருப்புவனத்தை அடுத்த வன்னிகோட்டையை சேர்ந்த பாலமுருகன் (50) உள்பட 14 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் சிலர் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மற்றவர்கள் சிவகங்கை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சம்பவம் தொடர்பாக பூவந்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story