பரமத்திவேலூரில் விபத்தில் சிக்கியவர்களை அழைத்து சென்ற தனியார் ஆம்புலன்ஸ் சாலையில் கவிழ்ந்தது-டிரைவர் பலத்த காயம்
பரமத்திவேலூர்:
பரமத்திவேலூரில் விபத்தில் சிக்கியவர்களை அழைத்து சென்ற தனியார் ஆம்புலன்ஸ், கார் மீது மோதி சாலையில் கவிழ்ந்தது. இதில் டிரைவர் பலத்த காயம் அடைந்தார்.
விபத்தில் சிக்கி 2 பேர் காயம்
பரமத்திவேலூர் அருகே உள்ள பொத்தனூரை சேர்ந்தவர் செந்தில்ராஜா. விவசாயி. இவர் நேற்று பாண்டமங்கலத்திற்கு தனது மாட்டு வண்டியை ஓட்டி சென்றார். அப்போது பின்னால் கார்த்திக் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள், எதிர்பாராத விதமாக மாட்டு வண்டி மீது மோதியது.
இதில் நிலைதடுமாறி கீழே விழுந்ததில், செந்தில்ராஜா, கார்த்திக் காயம் அடைந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் அவர்கள் 2 பேரையும் மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம், சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆம்புலன்சை நன்செய் இடையாறு பகுதியை சேர்ந்த கவின் (வயது 25) ஓட்டி சென்றார்.
ஆன்புலன்ஸ் கவிழ்ந்தது
பரமத்திவேலூர் நான்கு ரோடு பகுதியில் சென்றபோது, கரூரில் இருந்து பரமத்திவேலூருக்கு கார் ஒன்று வந்தது. திடீரென காரும், ஆம்புலன்சும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் ஆம்புலன்சு சாலையில் கவிழ்ந்தது. டிரைவர் கவின் பலத்த காயம் அடைந்தார். செந்தில்ராஜா, கார்த்திக் மீண்டும் காயம் அடைந்தனர்.
அங்கிருந்தவர்கள் அவர்கள் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பரமத்திவேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு செந்தில்ராஜா, கார்த்திக் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். படுகாயம் அடைந்த கவினுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.